பள்ளி, வழிபாட்டு தலங்கள் அருகே இறைச்சி விற்பனை செய்ய தடை
பள்ளி, வழிபாட்டு தலங்கள் அருகே இறைச்சி விற்பனை செய்ய தடை
UPDATED : ஜூலை 18, 2025 12:00 AM
ADDED : ஜூலை 18, 2025 10:35 PM
புதுடில்லி:
பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகில் இறைச்சி கடைகள் நடத்த தடை விதிக்கும் திட்டத்துக்கு, டில்லி மாநகராட்சியின் நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
டில்லி மாநகராட்சி நிலைக்குழு கூட்டம், அதன் தலைவர் சத்யா சர்மா தலைமையில் நடந்தது.
இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து அவர் கூறியதாவது:
பள்ளிகள், வழிபாட்டு தலங்களுக்கு அருகே இறைச்சி கடைகள் நடத்த தடை விதிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்படும் கோழி மற்றும் ஆட்டிறைச்சி கடைகளுக்கு உடனடியாக, 'சீல்' வைக்கும்படி பரிந்துரைக்கப்படுகிறது.
ஒரு நாள்; ஒரு சாலை திட்டத்தை செயல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டில்லி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாலைகளை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.
இந்த திட்டத்தின் கீழ், தினமும் ஒரு சாலை தேர்வு செய்யப்பட்டு, அந்த சாலையை சீரமைப்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, சாலையோரங்களில் மரங்களை நடுவது, நடைபாதை அமைப்பது, தெருவிளக்கு வசதியை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். வரும் செப்டம்பர் முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
தெரு நாய்கள் தொல்லையை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திலும் நாய்கள் காப்பகம் அமைப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பாரத் தர்ஷன் பூங்கா, பஞ்சாபி பாக் ஆகிய பகுதிகளில், அதிநவீன வசதிகள் கொண்ட, பன்னோக்கு பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தவும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. காஜிப்பூர் இறைச்சிக் கூடம் அமைந்துள்ள பகுதியில், மாட்டுச் சாணத்தை பதப்படுத்தும் தொழிற்சாலை அமைப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பருவமழைக் காலம் என்பதால், சாலைகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்களில் இருந்து பரவும் காய்ச்சல் போன்ற நோய்களை தடுக்க போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.