உலகளாவிய அங்கீகாரம் பெற்ற மையமாக திகழும் பெங்களூரு
உலகளாவிய அங்கீகாரம் பெற்ற மையமாக திகழும் பெங்களூரு
UPDATED : செப் 06, 2024 12:00 AM
ADDED : செப் 06, 2024 02:23 AM
பெங்களூரு:
பெங்களூரு, இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரமாக திகழ்கிறது. மேலும், புதுமை, ஆராய்ச்சி, தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சிக்கான, உலகளாவிய அங்கீகாரம் பெற்ற மையமாகவும் உள்ளது, என, ஐ.டி., பி.டி., துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு, நவம்பரில் நடக்கிறது.
இதற்கு முன்னோடியாக, மாநில தகவல் தொழில்நுட்ப துறை சார்பில், ஜி.ஐ.ஏ., எனும் குளோபல் இன்னோவேஷன் அலையன்ஸ் என்ற உலகளாவிய கண்டுபிடிப்பு கூட்டணி கலந்துரையாடல் நிகழ்ச்சி, பெங்களூரு தனியார் ஹோட்டலில் நடந்தது.
நிகழ்ச்சியை, கர்நாடக ஐ.டி., பி.டி., துறை அமைச்சர் பிரியங்க் கார்கே துவக்கி வைத்தார். ஆஸ்திரேலியா, டென்மார்க், இஸ்ரேல், ஜப்பான், ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் துாதர்கள் பங்கேற்றனர்.
அமைச்சர் பிரியங்க் கார்கே பேசியதாவது:
பெங்களூரு, இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரமாக திகழ்கிறது. மேலும், புதுமை, ஆராய்ச்சி, தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சிக்கான, உலகளாவிய அங்கீகாரம் பெற்ற மையமாகவும் உள்ளது.
பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில், உலகெங்கிலும் உள்ள ஒற்றை எண்ணம் கொண்டவர்களை ஒன்றிணைத்து, தகவல்களை பரிமாறிக் கொண்டு, புது தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படும்.
எதிர்கால வளர்ச்சிக்கு இந்த மாநாடு உதவியாக இருக்கும். உலகளாவிய கண்டுபிடிப்பு மையமாக, கர்நாடகாவின் நிலையை மேம்படுத்த, ஜி.ஐ.ஏ., உதவியாக இருக்கும். இம்முறை மாநாட்டில், 30க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பர்.