பெங்களூரு பல்கலைக்கழகத்திற்கு மன்மோகன்சிங் பெயர்; அமைச்சரவை ஒப்புதல்
பெங்களூரு பல்கலைக்கழகத்திற்கு மன்மோகன்சிங் பெயர்; அமைச்சரவை ஒப்புதல்
UPDATED : ஜூலை 03, 2025 12:00 AM
ADDED : ஜூலை 03, 2025 10:45 AM
சிக்கபல்லாபூர்:
பெங்களூரு பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயரை சூட்ட, சிக்கபல்லாபூரில் நேற்று நடந்த சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தின் மேம்பாட்டுப் பணிக்காக 2,050 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு வருவாய் மண்டலத்திற்கு உட்பட்ட பெங்களூரு, பெங்களூரு ரூரல், கோலார், சிக்கபல்லாபூர், துமகூரு ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக, சிக்கபல்லாபூர் நந்தி மலையில் நேற்று, சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்குப் பின், முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:
நாங்கள் ஆட்சிக்கு வந்த பின், வருவாய் மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களில், சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடத்த முடிவு எடுத்தோம். கலபுரகி, சாம்ராஜ்நகரில் சிறப்பு அமைச்சரவை கூட்டத்தை நடத்திய பின், தற்போது நந்திமலையில் நடத்தி உள்ளோம். பெலகாவி வருவாய் மண்டலத்தின் அமைச்சரவை கூட்டத்தை விஜயபுராவில் நடத்த முடிவு செய்துள்ளோம்.
நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், பெங்களூரு வருவாய் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்து 90 சதவீதம் பேசி உள்ளோம். மற்ற மாவட்ட பிரச்னை குறித்தும் விவாதிக்கப்பட்டது. மொத்தம் 48 பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
நீர்ப்பாசன திட்டம்
பெங்களூரு வருவாய் மண்டல மாவட்டங்களில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள 3,400 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் கிடைத்துள்ளது. இதில் பெங்களூரு நகர மாவட்டத்திற்கு மட்டும் 2,050 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு ரூரல், துமகூரு, கோலார், ஹாசன், சிக்கபல்லாபூர் மாவட்டங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில் எத்தினஹொளே குடிநீர் திட்டப் பணிகள் நடக்கின்றன. 23,251 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பணிகளுக்கு இதுவரை 17,147 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் 24.1 டி.எம்.சி., தண்ணீரில் 14 டி.எம்.சி., குடிக்கவும், 10.1 டி.எம்.சி., ஏரிகளில் நிரப்பவும் பயன்படுத்தப்படும். இன்னும் 2 ஆண்டுகளில் பணிகள் முடியும். கல்வி, சுகாதாரம், குடிநீர், நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து முக்கிய விவாதங்கள் நடந்தது.
பெங்களூரு வடக்கு
போட்டி தேர்வுக்கு தயாராகும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த மாணவர்கள் வசதிக்காக, பெங்களூரில் 10 கோடி ரூபாய் செலவில், இரண்டு குடியிருப்பு பள்ளிகள் கட்டப்படும். பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பெயரை டாக்டர் மன்மோகன்சிங் பெங்களூரு நகர பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்ற, அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு ரூரல் மாவட்டத்தின் பெயரை, பெங்களூரு வடக்கு என்றும், பாகேபள்ளி பெயரை பாக்யநகர் என்று பெயரிடவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் துறையில் பதிவு செய்த தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி முன்னேற்றத்திற்கு 1,125.25 கோடி ரூபாய் செலவில் கட்டடம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரின் கழிவுநீரை சுத்திகரித்து சித்தலகட்டா, சிந்தாமணி தாலுகாவில் உள்ள 164 ஏரிகளில் நிரப்பும் திட்டத்திற்கு 237 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம். சிக்கபல்லாபூரில் 10 கோடி ரூபாய் செலவில், சர்வதேச மலர் ஏல மையம் உருவாக்கப்படும். சிக்கபல்லாபூரில் 141.50 கோடி ரூபாய் செலவில், உயர் தொழில்நுட்ப பூ சந்தை நிறுவப்படும்.
சட்டவிரோத சுரங்கம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்டுள்ள, இனி எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க, சட்ட அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் தலைமையில் அமைச்சரவை துணை குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பாக போக நந்தீஸ்வரா கோவிலில், சித்தராமையா சாமி தரிசனம் செய்தார். அமைச்சர்களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அமைச்சரவை கூட்டத்திற்கு துணை முதல்வர் சிவகுமார் தாமதமாக வந்ததால், குழு புகைப்படத்தில் இல்லை.