தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அடிப்படை வசதிகள் அவசியம்
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அடிப்படை வசதிகள் அவசியம்
UPDATED : ஏப் 11, 2024 12:00 AM
ADDED : ஏப் 11, 2024 10:27 AM

ஒவ்வொரு தேர்தல் நடக்கின்ற போதும் ஓட்டு போடும் பூத்கள், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் ஆகியவற்றில் ஆசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் பிற துறை சார்ந்தவர்கள் அதிக அளவில் பணியில் ஈடுபடுத்த படுகின்றனர். இவர்களைத் தேர்தலுக்கு தயார் செய்வதற்காக பல்வேறு கட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
தேர்தல் நடைமுறைகள் விதிகள் குறித்து பயிற்சி மையங்களில் விளக்கம் அளிக்கின்றனர். பூத்களில் பணி புரிவதற்காக இவர்கள் ஒரு தாலுகாவை விட்டு மற்றொரு தாலுகாவிற்கு தேர்தல் பணி செய்ய அனுப்பப்படுகின்றனர்.
ஓட்டுப்பதிவின் போது முதல் நாள் அன்றே ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் ஆவணங்கள் ஆகியவற்றை பாதுகாப்பாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பூத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஒரு பூத்திற்கு 4 முதல் 5 பேர் வரை பணியில் அமர்த்தப்படுவர். இதில் பெண் பணியாளர்களும் இருப்பர். ஓட்டு பதிவிற்கு முதல் நாள் மதியமே இவர்களை பூத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அந்தந்த பகுதியில் உள்ள ஊராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள் தான் பூத்களாக செயல்படுகின்றன. பல பள்ளிகளில் தேவையான கழிப்பறை தண்ணீர் வசதிகள் இருப்பது இல்லை. இது போன்ற பள்ளிகளில் பூத்கள் இருப்பதால் அங்கு வரும் தேர்தல் பணியாளர்கள் குறிப்பாக பெண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பல பள்ளிகளில் கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால், பெண் பணியாளர்கள் கிராமங்களில் உள்ள வீடுகளில் தங்க நேரிடுகிறது.
தேர்தல் விதிகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என கறார் காட்டும் ஆணையம் தேர்தலை வெற்றிகரமாக நடத்த உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்கள், அலுவலர்களை கண்டு கொள்வதில்லை. இதனால் இவர்கள் தேர்தல் பணிக்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனர்.
ஓட்டுப்பதிவு முடிந்த பின் ஓட்டு பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்ல நள்ளிரவு வரை ஆகிறது. அவற்றை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யும் தேர்தல் அதிகாரிகள் அங்கு பணியில் இருந்த பணியாளர்கள் நள்ளிரவில் எவ்வாறு செல்வார்கள் என்பதில் அக்கறை இல்லை. அவர்களுக்கான வாகன ஏற்பாடுகளையும் செய்து தருவது இல்லை. இது போன்ற குறைபாடுகள் இருப்பதால் குறிப்பாக பெண் பணியாளர்கள் தேர்தலில் பணிபுரிய அச்சப்படுகின்றனர்.
மாவட்ட தேர்தல் நிர்வாகம் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகள், வாகன வசதிகள் செய்து தர வேண்டும்.