மழை நீரில் குளிக்கிறது ஜி.சி.டி.,தொழிற்கூடம்! நிரந்தர தடுப்பு நடவடிக்கை வேண்டும்
மழை நீரில் குளிக்கிறது ஜி.சி.டி.,தொழிற்கூடம்! நிரந்தர தடுப்பு நடவடிக்கை வேண்டும்
UPDATED : அக் 24, 2024 12:00 AM
ADDED : அக் 24, 2024 10:19 AM

கோவை :
அரசு தொழில்நுட்பக் கல்லுாரியின் தொழிற்கூடத்துக்குள், மழைநீர் புகுந்து தேங்கி நிற்கிறது. பாரம்பரியம் மிக்க இக்கல்லுாரியின், தொழிற்கூடம் இதனால் சேதம் அடையும் நிலை உருவாகிறது.
நேற்று முன்தினம் பெய்த கனமழையால், சாக்கடை கலந்த மழைநீர், நுழைவாயில் வழியாக கல்லுாரிக்குள் சென்று, குளம் போல் தேங்கியது. தேங்கியுள்ள இந்த நீரின் வழியாகவே, மாணவர்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
இதற்கு எல்லாம் மேல், கல்லுாரியின் இயந்திரவியல் துறை தொழிற்கூடத்துக்குள், மழைநீர் தேங்கியது. கடந்த சில தினங்களுக்கு முன், இதே போல் தொழிற்கூடத்தில் மழைநீர் புகுந்ததால், மின்வயர் துண்டிக்கப்பட்டது.
கல்லுாரி பேராசிரியர்கள் சிலர் கூறுகையில், இந்த பாதிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. பலமுறை நிர்வாகத்துக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. தொழிற்கூடத்தில் மின்மோட்டார்கள் உள்ளிட்ட பல இயந்திரங்கள் உள்ளன.
மின்கசிவு ஏற்பட்டு அதனால், அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு ஏற்பது? இது தவிர, கல்லுாரி வளாகத்துக்குள்ளும் மழைநீர் தேங்கி நிற்கிறது. ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அனைத்து சாக்கடை நீரும், மழை பெய்யும் போது கல்லுாரிக்குள் புகுந்து விடுகிறது. இதைத்தடுக்கவும் நடவடிக்கை இல்லை என்றனர்.
பாரம்பரியம்மிக்க இக்கல்லுாரியின் பலமே, இங்குள்ள தொழிற்கூடம்தான். ஆயிரக்கணக்கான பொறியாளர்களையும், தொழிற்முனைவோரையும் உருவாக்கிய இந்த தொழிற்கூடத்தின் இயந்திரங்களை, பத்திரமாக பாதுகாக்க வேண்டியது கல்லுாரி நிர்வாகத்தின் பொறுப்பு.
அறிவுறுத்தப்பட்டுள்ளது
கல்லுாரி முதல்வர் மனோன்மணி கூறுகையில், கல்லுாரியில், 1960ம் ஆண்டில் கழிவுநீர் வடிகால் கட்டப்பட்டது. அது முற்றிலும் சேதமடைந்ததால், அதை மாற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. தொழிற்கூடத்துக்குள் நீர் புகுவதை தடுக்க, பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசுக்கு இதுகுறித்து கருத்துருவும் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பிரச்னைகளும் சரிசெய்யப்படும் என்றார்.