UPDATED : ஜூன் 06, 2024 12:00 AM
ADDED : ஜூன் 06, 2024 04:03 PM

* ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., கனவில் லட்சக்கணக்கான பட்டதாரிகள் ஆண்டுதோறும் யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வில் தமிழக மாணவர்களின் செயல்பாடு மற்றும் தேர்ச்சி விகிதம் எவ்வாறு உள்ளது?
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்காக 5 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதும் நிலையில், ஒரு சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதமே உள்ளது. இந்த தேசிய அளவிலான தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் ஏறத்தாழ அதே அளவில் தான் உள்ளது. இத்தேர்வை ஏராளமானோர் ஆர்வமுடன் எழுவதால், கடும் போட்டி நிறைந்த ஒன்றாகவே உள்ளது.
*தேர்வுக்கு எப்போதிலிருந்து தயாராவது சிறந்தது?
கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும்போதே சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாவராவது சிறந்தது. எனினும், முதல் இரண்டு முறை தேர்வை எதிர்கொள்ளும் போது, எந்த கவனச்சிதறல்களும் இன்றி, முழுமையாக பயிற்சியில் கவனம் செலுவத்துவது நல்லது.
* கடும் போட்டி நிறைந்த இத்தேர்வுக்கு எவ்வளவு காலம் தயாராக வேண்டும்?
பாடத்திட்டங்கள் அதிகம் நிறைந்த இத்தேர்வு, 'அனைத்து எழுத்து தேர்வுகளின் தாய்' என்றும் வர்ணிக்கப்படுவது உண்டு. இத்தேர்வு குறித்த போதிய அறிவையும், நுட்பங்களையும் அறிந்து கொள்ளவும், தேர்வில் திறம்பட செயல்படவும், திட்டமிடப்பட்ட கற்றலில் ஒவ்வொரு மாணவரும் குறைந்தது 2 - 3 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவது அவசியம்.
*தேர்வுக்கு சிறப்பாக தயாராக உங்கள் 'டிப்ஸ்'?
பாடத்திட்டங்கள், கோட்பாடுகளை கவனமாக கற்பதுடன் நிகழ்கால மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகள் சார்ந்த ஆழ்ந்த அறிவை வளர்த்துக்கொள்வதும் அவசியம். தினமும் தேசிய நாளிதழ்களை வாசிப்பது மிகவும் அவசியம். அன்றாட முக்கிய நிகழ்வுகள், சிறப்பு கட்டுரைகள், தலையங்கம், உயர் அதிகாரிகளின் பேட்டிகள் போன்றவற்றை கூடுதல் கவனத்துடன் படிக்க வேண்டும். கடினமான பாடத்திட்டங்களை கொண்ட இத்தேர்வில் வெற்றி பெற சீரான, தொடர் வாசிப்பு, மற்றும் அர்ப்பணிப்புடன் கற்பது மிகவும் அவசியம்.
இந்திய பொருளாதாரம், அரசியலமைப்பு, இந்திய மற்றும் உலக வரலாறு, புவியியல் போன்ற தலைப்புகளில் ஆழ்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். என்.சி.இ.ஆர்.டி., பாடப்புத்தகங்கள், பிரபலங்களின் சுயசரிசதை புத்தகங்கள் ஆகியவையும் மெயின் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு பயனுள்ளதாக அமையும். இவை, தொடர்பியல் திறனை மேம்படுத்துவதோடு, சமூகத்தில் மதிப்புமிக்க பண்பாளராக உயர்த்தும்.
* தேர்வில் வெற்றிபெற தேவையான திறன்கள் எவை? அவற்றை மேம்படுத்த தங்கள் பயிற்சி நிறுவனத்தில் வழங்கப்படும் பிரத்யேக பயிற்சிகள் எவை?
தேர்வு சார்ந்த அடிப்படை அறிவு, தேவையான திறன் வளர்ப்பு பயிற்சி ஆகியவற்றுடன் பதில் எழுதும் பயிற்சி, மென்டர்ஷிப் புரொகிராம், ஒவ்வொரு மாணவரின் எதிர்பார்ப்பு மற்றும் தேவையை அறிந்து பிரத்யேக கவனிப்பு ஆகியவற்றை கூறலாம். மேலும், முதல் 3 மாதங்கள் பொது அறிவு மற்றும் விருப்பப்பாடம் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிவில் சர்வீசஸ் தேர்வுகள் சார்ந்து 30 மாதிரித் தேர்வுகள் மற்றும் திருப்புதல் தேர்வுகள் நடத்துகிறோம். இதன் வாயிலாக, கேள்விக்கு பதில் அளிக்கும் திறன் மேம்படுகிறது. தேர்வுத்தாள்கள் சரிபார்க்கப்பட்டு, ஒவ்வொரு மாணவரது பலம் மற்றும் பலவீனம் குறித்து ஆராய்ந்து, அதற்கேற்ப உரிய ஆலோசனைகளையும் கூடுதல் பயிற்சிகளையும் அளிக்கிறோம். நாளிதழ்களை எவ்வாறு வாசிப்பது முதல் ஒவ்வொரு விதமான கேள்விக்கும் பதில் அளிக்கும் விதம் வரை தேர்வுக்கு தேவையான பல்வேறு பயிற்சிகளை வழங்குகிறோம்.
-ரவிந்திரன், இயக்குனர், வாஜிரம் அண்டு ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., புதுடெல்லி மற்றும் சென்னை.