UPDATED : ஏப் 05, 2024 12:00 AM
ADDED : ஏப் 05, 2024 10:15 AM
சென்னை:
இந்திய பதிப்பு துறையில் சிறந்து விளங்குவோருக்கு அளிக்கப்படும், பப்ளிஷிங் நெக்ஸ்ட் அமைப்பின் கடந்தாண்டுக்கான சிறந்த பதிப்பகத்துக்கான விருது, தமிழ் பதிப்பகமான காலச்சுவடுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பதிப்பு துறையில் சிறந்து விளங்குவோருக்கு, கோவாவை சேர்ந்த, பப்ளிஷிங் நெக்ஸ்ட் என்ற அமைப்பு, 11 பிரிவுகளில் விருதுகளை வழங்கி வருகிறது.
புதுமை, திறமை
கடந்த பத்தாண்டுகளாக வழங்கப்படும் இந்த விருதுக்கு, புதுமையும், திறமையும் அங்கீகாரமாக ஏற்கப்படுகின்றன. அந்த வகையில், சிறந்த பதிப்பகத்துக்கான விருது, தமிழில் சிறந்த நுால்களையும், காலச்சுவடு இதழையும் வெளியிட்டு வரும், காலச்சுவடு பதிப்பகத்துக்கு அறிவிக்கப்பட்டுஉள்ளது.
இந்த விருதை, இதே காலச்சுவடு பதிப்பகம், 2018லும் பெற்றுள்ளது. அந்த வகையில், ஆங்கிலம் அல்லாத பதிப்புகளை வெளியிடும் காலச்சுவடு, இரண்டாம் முறையாக விருது பெறுவது தனித்துவமாக பார்க்கப்படுகிறது.
விருது குறித்து, பப்ளிஷிங் நெக்ஸ்ட் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு:
அச்சமில்லாத, புரட்சிகரமான தலைப்புகளையும், தகவல்களையும் முற்போக்கு சிந்தனையுடன், காலச்சுவடு பதிப்பகம் நுால்களாக வெளியிட்டு வருகிறது.
இது, நுாலாசிரியர்களின் கருத்துக்களிலோ, மனதைக்கவர்ந்து, ஊக்கமளிக்கும் தன்மையிலோ தன்னை சமரசம் செய்து கொள்ளாமல், ஒவ்வொரு நுாலிலும் தரம், புதுமை, சமூக மாற்றத்துக்கான தகவல்களை தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
வலு சேர்க்கிறது
இதுகுறித்து, காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் கூறுகையில், காலச்சுவடு எப்போதும் தேர்ந்த அணியாக செயல்படுகிறது. இந்த விருது, அணியின் அர்ப்பணிப்புக்கும் திறமைக்கும் வலு சேர்க்கிறது என்றார்.