இரு மொழிக்கொள்கை, மாநில பட்டியலில் கல்வி: த.வெ.க., அறிவிப்பு
இரு மொழிக்கொள்கை, மாநில பட்டியலில் கல்வி: த.வெ.க., அறிவிப்பு
UPDATED : அக் 28, 2024 12:00 AM
ADDED : அக் 28, 2024 09:27 AM
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி த.வெ.க., மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இருமொழி கொள்கைதாய்மொழி தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலம் என இருமொழி கொள்கையை த.வெ.க., பின்பற்றுகிறது. தமிழே ஆட்சி மொழி.தமிழே வழக்காடு மொழி. தமிழே வழிபாட்டு மொழி. தமிழ் வழி கொள்கைக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.
அரசு மற்றும் தனியார் துறை எந்த துறையிலும் அரசியல் தலையீடு அற்ற லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகத்தை கொண்டு வருவோம். மதம், இனம், மொழி, வர்க்க பேதம் அற்ற வகையில் கல்வி சுகாதாரம் தூய காற்று தூய குடிநீர் என்பது எல்லாருக்குமான அடிப்படை உரிமை. சுற்றுச்சூழல் இயற்கை வளங்களை பாதுகாப்பது அரசின் தலையாய கடமை.
த.வெ.க.,வின் செயல்திட்டங்கள்
*தமிழ் மொழியிலேயே ஆராய்ச்சி கல்வி வரை கற்கலாம் என்பதும் தமிழ் வழிக்கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்பது உறுதி செய்யப்படும்
*கீழடி மற்றும் கொந்தகை சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள போதுமான நிதி ஒதுக்கப்பட்டு பழந்தமிழரின் வைகை நாகரீகத்தை உலகிற்கு வெளிக்கொணர முன்னுரிமை அளிக்கப்படும்
*மாநில தன்னாட்சி உரிமை கொள்கைப்படி மருத்துவம் போலவே கல்வியும் மாநில பட்டியலுக்கு மாற்ற அழுத்தம் கொடுக்கப்படும்
*மாநில அரசுகளின் சுயமரியாதையை சீண்டும் கவர்னர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்
*தமிழக வெற்றி கழகத்தில் 3ல் ஒரு பங்கு கட்சி பதவிகள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பெண்களுக்கு ஒதுக்கப்படும். படிப்படியாக அது உயர்த்தப்பட்டு 50 சதவீதம் என்ற நிலையும் எட்டப்படும். அனைத்து துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும். பெண்கள் குழந்தைகள் முதியோர் பாதுகாப்புக்கு தனித்துறை ஒதுக்கப்படும்.
*மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டது போல் மாவட்டந்தோறும் மகளிருக்காக கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்கப்படும்
*மனித குல அழிவிற்கு வழிவகுக்கின்ற உடல் மன குணநலனுக்கு கேடாக அமையும் அறிவியல் சாராத சிந்தனைகள் முற்றாக நிராகரிக்கப்படும்.
*தீண்டாமை என்பது குற்றம். தீண்டாமையை கடைபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
*ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிநவீன வசதிகளை கொண்ட காமராஜர் மாதிரி பள்ளி ஒன்று உருவாக்கப்படும்.
*உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிகல்விக்கான தரம் உயர்த்தப்படும். தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு என தனியாக பல்கலை உருவாக்கப்படும்
*மாவட்ட அளவில் அரசு பன்னோக்கு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேவையான மருத்துவ பரிசோதனை செய்யும் வகையில் தரம் உயர்த்தப்படும்.
*புற்றுநோய் போன்ற தீவிரமான நோய்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மருத்துவமனை நிறுவப்படும்
*விவசாயிகளின் விற்பனை விலை, நுகர்வோர் வாங்கும் விலை இவற்றிற்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்க அறிவியல் பூர்வமான முறை நடைமுறைப்படுத்தப்படும்
*நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஆக்கிரமிக்கப்பட்ட சதுப்பு நிலங்கள் விவசாய நிலங்கள் மீட்கப்படும்.
*அதிக கொள்ளளவு கொண்ட புதிய ஏரிகள், நீர்த்தேக்கங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்படும்
*தமிழ் மரபு மொழி தொழிலான பனைத்தொழில் மேம்படுத்தப்படும். ஆவின் பாலகங்களில் கருப்பட்டி பாலும் வழங்கப்படும். பதநீர் மாநில பானமாக அறிவிக்கப்படும்.
*நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அரசு ஊழியர்கள் வாரத்திற்கு இரு முறை கைத்தறி ஆடை அணிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.
*பள்ளி மாணவர்கள் மருத்துவ பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களின உடைகள் நெசவாளர்களிடம் இருந்து நேரடியாக அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை
*மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட அவர்கள் தயாரிக்கும் மண்பாண்ட பொருட்களை அரசு உணவகங்கள் மற்றும் விடுதிகளில் பயன்படுத்த நடவடிக்கை
*தமிழகத்தில் மணல் கொள்ளை, நிலத்தடி நீர் கொள்ளை, கனிம வள கொள்ளையை தடுக்க சிறப்பு சட்டம்
*மண்டல வாரியான துணை நகரங்கள் உருவாக்கப்படும்
*தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் செயல் இழந்து உள்ளது அந்த அமைப்பு சீரமைக்கப்படும்
*வன விலங்குகள், பறவைகள் அரிய வகை உயிரினங்களை பாதுகாக்க வன பரப்பளவு அதிகரிக்கப்படும்
*போதைப்பொருட்களை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும்