அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவாக பிஸ்கட் தரக்கூடாது
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவாக பிஸ்கட் தரக்கூடாது
UPDATED : ஜூன் 22, 2026 10:53 AM
ADDED : ஜூன் 22, 2026 10:54 AM

சென்னை:
'அரசு பள்ளிகளில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் போது, கட்சித் தலையீடுகள் இருக்கக்கூடாது,' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
அரசு பள்ளிக்குள் முதல்வரின் படத்தோடு, த.வெ.க., தோழர்கள் சென்றதை ஏற்க முடியாது. இது குறித்து, த.வெ.க., பொதுச்செயலாளர் ஆனந்துடன் பேசி உள்ளேன்.
அவர், சம்பந்தப்பட்ட நிர்வாகி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்கு, நம் தொண்டர்கள் நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கலாம்.
ஆனால், பள்ளி இயங்கும் நாட்களில், மாணவர்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ எந்தவித இடையூறும் செய்யக்கூடாது. பள்ளிகளுக்குள் கட்சி சார்ந்த கொடிகளையோ அல்லது விளம்பரங்களையோ பயன்படுத்தாமல், பொருட்களை தலைமை ஆசிரியரிடம் அமைதியாக ஒப்படைக்க வேண்டும். மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அரசு பள்ளியில் காலை உணவுக்கு பதிலாக, 'பிஸ்கட் பாக்கெட்' வழங்கப்பட்டதாக தகவல் அறிந்தேன்.
மாணவர்களுக்கான காலை மற்றும் மதிய உணவு என்பது, வெறும் உணவு மட்டுமல்ல; அது மாணவர்களுக்கான ஊட்டச்சத்து; அது, ஆற்றல் தருவது. பிஸ்கட் என்பது வெறும் துணை உணவு மட்டுமே.
அதனால், குறிப்பிட்ட நேரத்தில் உணவு சமைக்கவோ, ஏற்பாடு செய்யவோ முடியாவிட்டால், அதற்கு மாற்றாக வேறு உணவு வகைகளை தான் வழங்கி இருக்க வேண்டும்; பிஸ்கட் வழங்கக்கூடாது.
அவ்வாறு ஏன் வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரித்து, அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. முழு விபரம் வந்த பின், உரியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு பள்ளிகளில், கழிப்பறை இல்லாத வகுப்பறைகள் பயனற்றவை. நிதி ஒதுக்கி, புதிய நவீன கழிப்பறைகளை கட்டுவதுடன், மாதத்திற்கு ஒரு முறை அவை சரியாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
