UPDATED : அக் 10, 2025 08:07 AM
ADDED : அக் 10, 2025 08:08 AM
சென்னை:
'அரசு பள்ளி ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனையும், மாணவர்களின் கற்றல் திறனையும், அமைச்சர் துரைமுருகன் அவமானப்படுத்தி உள்ளார்' என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., அரசின், 'உங்களுடன் ஸ்டாலின்' விளம்பர நாடகத்திற்காக, அரசு பள்ளி வகுப்பறைகள் பறிக்கப்பட்டு, கொளுத்தும் வெயிலில், மாணவர்கள் வெளியே அமர வைக்கப்படுகின்றனர்.
இது குறித்த கேள்விக்கு, 'ஒரு நாளில் அப்படி ஒன்றும் பாடம் நடக்கப் போவதில்லை. ஒரு நாளில் மாணவர் களின் படிப்பிற்கு எந்த இடையூறும் வரப் போவதில்லை' என அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்கிறார்.
இதன் வாயிலாக, அரசு பள்ளி ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனையும், மாணவர்களின் கற்றல் திறனையும் ஒரு சேர அவமானப்படுத்தி உள்ளார். ஆணவம் தெறிக்கும் அவரின் பேச்சு, கடும் கண்டனத்திற்கு உரியது.
அரசு பள்ளி ஒரு நாள் செயல்படாவிட்டால், குடி முழுகி போகாது என்ற தொனியில், ஒரு அமைச்சர் பொது வெளியில் பேசுகிறார் என்றால், ஏழை மாணவர்களின் கல்வி மீது, தி.மு.க.,வினருக்கு எத்தனை அலட்சியம் இருக்க வேண்டும்.
வெற்று விளம்பரங்களுக்காக, அரசு பள்ளிகளை ஒரு நாள் முடக்கும் அரசு, 'டாஸ்மாக்' கடைகளுக்கு, ஒரு மணி நேரம் கூட விடுமுறை கொடுப்பதில்லையே ஏன்? இந்த லட்சணத்தில் இவர்களுக்கு, 'கல்வியில் சிறந்த தமிழகம்' என்ற விளம்பரம் வேறு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.