UPDATED : டிச 04, 2024 12:00 AM
ADDED : டிச 04, 2024 03:50 PM
ஊட்டி:
ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரிக்கு இ-மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி அருகே பட்பயரில், அரசு மருத்துவ கல்லுாரி செயல்பட்டு வருகிறது. முதலாமாண்டு முதல் நான்காம் ஆண்டு வரை ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை இ--மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த கல்லுாரி நிர்வாகம் எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தது.
தொடர்ந்து, ஊட்டி ஜி-1 இன்ஸ்பெக்டர் சந்திரசீலன் தலைமையிலான போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் மருத்துவ கல்லுாரிக்கு சென்று தீவிர சோதனை செய்தனர்.
வகுப்பறை, வளாகம் உட்பட பல்வேறு இடங்களில் முழுவதும் ஆய்வு செய்து வாகனங்களையும் சோதனை செய்து விசாரணை நடத்தினர். கல்லுாரி மாணவ, மாணவியர் நேற்று வகுப்புக்கு செல்லாமல் வெளியே வந்தனர்.
ஏ.டி.எஸ்.பி., சவுந்திரராஜன் கூறுகையில், மருத்துவ கல்லுாரி சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. மருத்துவ கல்லுாரியில் சந்தேகம் படும்படியாக ஏதாவது பொருட்கள் இருந்தால் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைபர் கிரைம் போலீசார் சார்பில் விசாரணை நடந்து வருகிறது. மற்ற விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும், என்றார்.