சிந்திக்க வைக்கும் புத்தகங்கள்; வேள்பாரி நாவல் வெற்றி விழாவில் ரஜினி பேச்சு
சிந்திக்க வைக்கும் புத்தகங்கள்; வேள்பாரி நாவல் வெற்றி விழாவில் ரஜினி பேச்சு
UPDATED : ஜூலை 13, 2025 12:00 AM
ADDED : ஜூலை 13, 2025 08:32 AM

சென்னை:
புத்தகங்கள் நிறைய பேரை சிரிக்க வைக்கின்றன; சிந்திக்க வைக்கின்றன; புத்தகங்கள் வாசிப்பது என்பது மிகச்சிறந்த பொழுதுபோக்கு என நடிகர் ரஜினி பேசினார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.,யுமான சு.வெங்கடேசன் எழுதியுள்ள, வீரயுக நாயகன் வேள்பாரி என்ற நாவல், 1 லட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளதை தொடர்ந்து, அதற்கான வெற்றி விழா, சென்னை கலைவாணர் அரங்கில், நடந்தது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினி, வேள்பாரி 1,00,000 வெற்றிச் சின்னத்தை வெளியிட்டார். நுாலை பதிப்பித்த, ஆனந்த விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத், நடிகை ரோகிணி, நிதித்துறை செயலர் உதயச்சந்திரன், சினிமா இயக்குனர் ஷங்கர் உள்ளிட்டோர் விழாவில் பேசினர்.
நடிகர் ரஜினி:
வேள்பாரி புத்தகத்தை நான் முழுமையாக படிக்காததற்கு, ஒரு கதை இருக்கிறது. அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பின், மஹாராஷ்டிராவில் மூன்று ஏக்கர் நிலத்தில், 10 மாடுகள், ஒரு தோட்டக்காரர், ஒரு சமையல்காரர் மட்டும் இருக்கும் இடத்தில், 800க்கும் மேற்பட்ட புத்தகங்களை படிக்க விரும்பியதாக, முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், என்னிடம் கூறினார்.
அவருக்கு பல மொழிகள் தெரியும். அதேபோன்று, நானும் ஓய்வு காலத்தில் படிக்க விரும்பியதால், வேள்பாரி நாவலை எடுத்து வைத்துக் கொண்டேன். ஒரு இடத்தில் என்ன பேச வேண்டும் என்று அறிவு சொல்லும்; எப்படி பேச வேண்டும் என்று திறமை சொல்லும்; எதை பேச வேண்டும்; எதை பேசக் கூடாது என்பதை அனுபவம் சொல்லும்.
கருணாநிதி குறித்து அமைச்சர் எ.வ.வேலு எழுதியுள்ள புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றேன். அதில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்றனர்; எல்லாரும் நண்பர்கள்தான்.
அதில், பழைய மாணவர்கள், வகுப்பை விட்டு போக மாட்டார்கள். அவர்களை சமாளிப்பது கடினம் என்று கூறினேன். அதன்பின், அதுபோன்ற மாணவர்கள்தான் பள்ளியின் அடித்தளம், துாண்கள். அவர்கள் இல்லை என்றால், எந்த இயக்கமும் வளராது.
அவர்கள் துாண்கள் மட்டுமல்ல, சிகரமும் கூட என்று சொல்ல நினைத்தேன். அனைவரும் சிரித்ததில், அதை பேச மறந்து விட்டேன்.
எழுத்து, கதை இல்லாமல் எந்த நாடும் இல்லை; ஊரும் இல்லை. புத்தகங்கள் நிறைய பேரை சிரிக்க வைக்கின்றன; சிந்திக்க வைக்கின்றன. புத்தகங்கள் வாசிப்பது என்பது மிகச்சிறந்த பொழுதுபோக்கு.
கருணாநிதி, சம்பத், நடராஜன் மிகச்சிறந்த பேச்சாளர்கள். இவர்கள் பேசிய பின், அண்ணாதுரை பேசுவார். மற்றவர்கள் பேசியது, அப்போது எதுவும் எடுபடாது. ஆனால், அண்ணாதுரையை தேர்தலில் மக்கள் தோற்கடித்தனர். கருணாநிதியை வெற்றி பெற வைத்தனர். பராசக்தி, மனோகரா போன்றவைதான் இதற்கு காரணம்.
நிதித் துறை செயலர் உதயச்சந்திரன்:
ஒரு படைப்பு எப்போது வெற்றி பெறுகிறது என்று யோசித்து பார்த்தால், தேவை நிறைவேறும்போது, அந்த படைப்பு வெற்றி பெறுகிறது. வரலாறு அவ்வப்போது தனது நாயகர்களை தேர்ந்தெடுத்து கொள்கிறது. இந்த சமூகம், தலைவர்களை, தனக்கான படைப்பை, அடையாளம் காட்டும்.
விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன்:
கடந்த 2016ம் ஆண்டு தீபாவளி சிறப்பிதழில் துவங்கி, 111 வாரங்கள் வேள்பாரி தொடர் வெளியானது. அதே சூட்டில், 2018ம் ஆண்டு புத்தக வடிவில் வெளியாகி, ஆறு ஆண்டுகளில் 1 லட்சம் பதிப்புகள் விற்றுள்ளது. அதுவும், இதே யுகத்தில் தான் நிகழ்ந்தது என்ற நெகிழ்ச்சியில் உறைந்து நிற்கிறேன்.
அறத்தின் அடையாளமாக விளங்கும் வேள்பாரியையும், அவரை பற்றிய நாவலையும் வெளியிட்டதற்கு, விகடன் மிகவும் பெருமிதம் கொள்கிறது.
நுாலாசிரியர் சு.வெங்கடேசன்:
தமிழில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் பத்தாயிரம் ஆண்டு பழமையான சொல். உண்மைக்குள் எவ்வளவு மூழ்கிறோம்; புனைவில் எவ்வளவு மிதக்கிறோம் என்பதைப் பொறுத்தே படைப்பு அமைகிறது. அறத்தை பேசும் வேள்பாரி நுாலை தமிழர்கள் கொண்டாடுவது பெருமிதம் கொள்ளச் செய்கிறது.
இவ்வாறு அவர்கள் பேசினர்.