மாணவர் பூணுாலை அகற்ற கூறியதால் பல இடங்களில் பிராமண சங்கம் போராட்டம்
மாணவர் பூணுாலை அகற்ற கூறியதால் பல இடங்களில் பிராமண சங்கம் போராட்டம்
UPDATED : ஏப் 21, 2025 12:00 AM
ADDED : ஏப் 21, 2025 09:00 PM
பீதர்:
பொது நுழைவுத் தேர்வு எழுத சென்ற மாணவரின், பூணுாலை அகற்ற கூறிய விவகாரத்தில், அரசுக்கு எதிராக பிராமண சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
பீதரை சேர்ந்த சுசிவ்ரித் குல்கர்னி என்ற மாணவர் சாய் ஸ்பூர்த்தி என்ற கல்லுாரியில், 17ம் தேதி இன்ஜினியரிங் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு எழுதச் சென்றார்.
அவர் அணிந்திருந்த பூணுாலை, தேர்வு மைய அதிகாரிகள் அகற்றுமாறு கூறினர். இதற்கு மறுப்பு தெரிவித்து தேர்வு எழுதாமல் திரும்பி வந்துவிட்டார். ஷிவமொக்காவில் அபிஜ்னா என்ற மாணவர், கையில் கட்டி இருந்த காசி கயிறை, ஊர்க்காவல்படை ஊழியர்கள் அகற்றி உள்ளனர்.
இந்த இரண்டு சம்பவங்களும், பிராமண சமூகத்தினரை கடும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது. பூணுாலை அகற்றுமாறு கூறிய விஷயத்தில், அரசின் பங்கு எதுவும் இல்லை என, அமைச்சர்கள் எம்.சி.சுதாகர், மது பங்காரப்பா விளக்கம் அளித்தனர்.
சஸ்பெண்ட்
இதற்கிடையில் மாணவரை தேர்வு எழுத அனுமதி மறுத்தது பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, பீதர் கலெக்டர் ஷில்பா சர்மாவுக்கு அரசு உத்தரவிட்டு இருந்தது. கலெக்டர் நடத்திய விசாரணையில், கல்லுாரியின் முதல்வர் சந்திரசேகர், இரண்டாம் நிலை ஊழியர் சதீஷ் தவறு செய்தது தெரிந்தது.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர், அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தேர்வு பார்வையாளர் மொதாசீர் என்பவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இதுபோல ஷிவமொக்காவில் மாணவர் கையில் அணிந்திருந்த காசி கயிற்றை அகற்றியதால், ஊர்காவல் படை வீரர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து, மைசூரு, பீதர், கலபுரகி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று, பிராமண சமூகத்தினர் பேரணி, போராட்டம் நடத்தினர்.
கலபுரகியில் சாலையில் டயரை போட்டு, தீ வைத்து எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பீதரில் பிராமண மகாசபா நடத்திய பேரணிக்கு, லிங்காயத் மகாசபா, அகில இந்திய மாணவர் பேரவை ஆதரவு தெரிவித்தது. கலெக்டர் ஷில்பா சர்மாவை சந்தித்து மனுக் கொடுத்தனர்.
பூணுால் இல்லாமல் பிராமணர் இல்லை. பூணுாலை அகற்ற மறுத்த மாணவர் சுசிவ்ரித் வாழ்க்கையில், தேர்வு மைய அதிகாரிகள் விளையாடி உள்ளனர். அவர்கள் மன்னிக்காத முடியாத குற்றத்தை செய்துள்ளனர்.
மாணவருக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு 90 சதவீத மதிப்பெண் வழங்கி, இன்ஜினியரிங் படிக்க அரசு இலவச மாணவர் சேர்க்கை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் போராடுவோம் என, கலெக்டரிடம் கூறினர்.