கிளை நுாலக கட்டடம் சேதம் : இடவசதியின்றி வாசகர்கள் தவிப்பு
கிளை நுாலக கட்டடம் சேதம் : இடவசதியின்றி வாசகர்கள் தவிப்பு
UPDATED : ஜூலை 25, 2025 12:00 AM
ADDED : ஜூலை 25, 2025 09:37 AM
திருத்தணி:
அருங்குளம் பகுதியில் இயங்கி வரும் கிளை நுாலக கட்டடம் சேதமடைந்தும், அமர்ந்து படிப்பதற்கு போதிய இடவசதியின்றியும் வாசகர்கள் தவித்து வருகின்றனர்.Image 1447115திருவாலங்காடு ஒன்றியம், அருங்குளம் அரசினர் மேல்நிலைப் பள்ளி எதிரே கிளை நுாலகம் இயங்கி வருகிறது. இங்கு, 26,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் போட்டி தேர்வுக்கான புத்தங்களும் உள்ளன.
இதுதவிர, தினசரி நாளிதழ்கள், வாரம் மற்றும் மாதாந்திர அரசியல், ஆன்மிக புத்தகங்களும் வருகின்றன. இதனால், தினமும் 100க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து புத்தகம் மற்றும் செய்திதாள்களை படித்துவிட்டு செல்கின்றனர்.
மேலும், போட்டி தேர்வுக்கு படிக்கும் இளைஞர்களும் வருகின்றனர். கிளை நுாலகம் இயங்கி வரும் கட்டடம் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து வருகிறது. மேலும், மழை பெய்தால் நீர்க்கசிந்து புத்தகங்கள் வீணாகி வருகிறது.புத்தகங்கள் வைப்பதற்கும், புதிய இருக்கை மற்றும் மேஜைகள் வைக்க போதிய இடவசதியில்லை. நுாலக வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு இடவசதி உள்ளதால், புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, வாசகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, நுாலக கட்டடத்தை சீரமைத்து, கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும் என, வாசகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.