கோவையில் 1.27 லட்சம் பேருக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம்
கோவையில் 1.27 லட்சம் பேருக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம்
UPDATED : செப் 23, 2026 06:03 PM
ADDED : செப் 23, 2026 06:04 PM
கோவை:
விரிவாக்கம் செய்யப்பட்ட 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' மாவட்டத்தில் 1,608 பள்ளிகளை சேர்ந்த 1.27 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
நேற்று மாணவர்கள் பள்ளிக்கு வரும் முன்பே காலை உணவு தயாரிக்கப்பட்டது. மாணவர்களுடன் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களும் இணைந்து அமர்ந்து உணவருந்தினர். முதல் நாளில் பொங்கல், சாம்பார், சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
ஸ்பான்சர் பிடித்து கேசரி வழங்கும்படி மேலிட உத்தரவு வந்ததால் தலைமை ஆசிரியர்கள் அதிருப்தியில் இருப்பதாக தினமலர் நேற்று செய்தி வெளியிட்டது. அதன் எதிரொலியாக, கேசரி கைவிடப்பட்டது. சர்க்கரை பொங்கல் கூட, மாந்கராட்சிக்கு வெளியே உள்ள ஊராட்சி பள்ளிகளில் மட்டுமே பரிமாறப்பட்டதாக நமது ஊரக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
பல பள்ளிகளில் சி.எஸ்.ஆர்., திட்டத்தின் வாயிலாக மாணவர்களுக்கு புதிதாக தட்டு, டம்ளர்கள் வாங்கப்பட்டிருந்தன. எனினும், சமையல் பாத்திரங்கள் போதுமான அளவில் இல்லாத நிலையும் காணப்பட்டது.
'மிகப்பெரிய அளவுல் சமூக, பொருளாதார பயன்கள் கிடைக்கக்கூடிய திட்டம் என்பதை அனைவரும் உணர்ந்திருப்பதால், சிறப்பாக ஒத்துழைத்தனர்; சேர்ந்து பணியாற்றினர்' என உயர் அதிகாரி தெரிவித்தார்.
சிறு பிரச்னைகள் நாள்போக்கில் சரி செய்யப்பட்டு விடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களும் திட்டத்தில் இணைந்துள்ள நிலையில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவு தயாரிப்பு வசதி, பாத்திரங்கள், குடிநீர், சமையலறை மற்றும் உணவுக்கூட வசதிகளை மேம்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.
