காலை உணவு திட்டம் லாபம் தரப்போகும் சமூக முதலீடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
காலை உணவு திட்டம் லாபம் தரப்போகும் சமூக முதலீடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
UPDATED : ஆக 27, 2025 12:00 AM
ADDED : ஆக 27, 2025 01:48 PM
சென்னை:
''காலை உணவு திட்டம் ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. இது, நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பல மடங்கு லாபத்தை, தமிழ் சமூகத்துக்கு தரப் போகிற முதலீடு,'' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு, காலை உணவு வழங்கும் திட்டத்தை, சென்னை மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நேற்று காலை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
3.06 லட்சம் குழந்தைகள்
பின், முதல்வரும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரும், மாணவ - மாணவியருடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர்.
நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
காலை உணவு திட்டத்தின் அட்டகாசமான, 'சக்சஸ்' மற்றும் இது கொடுக்கக்கூடிய அபாரமான ரிசல்டை பார்த்து, நகர்ப்புற பகுதிகளில் செயல்படும் 2,429 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதனால், கூடுதலாக 3.06 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவர்.
இனி, 37,416 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கிற 20.59 லட்சம் மாணவர்கள் தினமும் காலையில் சூடாக, சுவையாக, சத்தான உணவு சாப்பிட்டு, வகுப்பறைக்குள் தெம்பாக நுழைய உள்ளனர்.
ஆண்டுக்கு, 600 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதை செலவு என்று நான் சொல்ல மாட்டேன். இது, ஒரு சூப்பரான சமூக முதலீடு. எதிர்காலத்தில், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு, பல மடங்கு லாபத்தை தமிழ் சமூகத்துக்கு தரப்போகிற முதலீடு இது.
பழகுகின்றனர்
பசி இல்லாத நிலை, குழந்தைகள் வயிறு நிறைகிறது என்று மட்டும் திட்டத்தை சிம்பிளாக பார்க்க முடியாது. இதனால், உணவு உண்ணும் பழக்க வழக்கங்களில் முன்னேற்றம் வந்துள்ளது. நேர்மறையான பழக்க வழக்கங்களை வளர்ப்பதில், குழந்தைகள் ஆர்வம் காட்டுகின்றனர்; மற்ற குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பழகுகின்றனர்.
கடந்த 2023 டிச., முதல், 2024 டிச., வரை, அரசு பள்ளிகளில் குழந்தைகளின் ஆரோக்கியம் அதிகரித்திருக்கிறது; மருத்துவமனைக்கு செல்வதும் குறைந்திருக்கிறது; வருகை பதிவு அதிகரித்துள்ளது; கற்றல் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது; ஊட்டச்சத்து குறைபாடு குறைந்திருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியதாவது:
இத்திட்டம் வாயிலாக, மாணவர்கள் ஆரோக்கியமான உணவை தினமும் உண்டு, பள்ளியில் கல்வி கற்க ஆரம்பிக்கின்றனர். இது, குழந்தைகளின் ஆரோக்கியம், பள்ளி வருகை மற்றும் கல்வித் திறனை மேம்படுத்த உதவுகிறது.
காலை உணவு திட்டம், மத்திய அரசுக்கும், பிற மாநிலங்களுக்கும் ஒரு முன்மாதிரி திட்டமாக விளங்குகிறது. மாணவர்கள் பசியில்லாமல், கல்வி கற்று விஸ்வ குருவாக வருவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
பாராட்டுகிறது
துணை முதல்வர் உதயநிதி பேசும்போது, ''தி.மு.க., அரசு கல்விக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களை, ஒட்டுமொத்த நாடும் பாராட்டுகிறது. இந்த திட்டங்களை பிற மாநிலங்கள் பாராட்டுவது மட்டுமல்ல, அதை பின்பற்றியும் வருகின்றன; வெளிநாடுளிலும் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர்,'' என்றார்.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் பேசும் போது, ''இத்திட்டத்தில் தினமும் 5 கிராம் முருங்கை இலை பொடியை சேர்த்து வழங்க வேண்டும். இதனால், ரத்த சோகை பாதிப்பு வராது; புரோட்டீன், கால்சியம் சத்துகள் கிடைக்கும்,'' என்றார்.