UPDATED : ஜூன் 09, 2025 12:00 AM
ADDED : ஜூன் 09, 2025 11:09 AM

சென்னை:
சென்னை ஐஐடி -ல் பிஎஸ் பட்டப்படிப்புகளுக்கான பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
தரவியல் அறிவியல் மற்றும் மின்னணு அமைப்புகள் ஆகிய துறைகளில் பட்டம் பெறும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதுவரை 38,000க்கும் மேற்பட்டோர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்து இந்த பாடத்திட்டங்களை படிக்கிறார்கள். இதில் 52% மாணவர்கள் மற்றொரு இளங்கலை படிப்புடன் இணைந்து இந்த படிப்பையும் தொடர்கின்றனர்.
சென்னை ஐஐடி-ன் இயக்குனர், பேராசிரியர் காமக்கோடி கூறுகையில், இந்த ஆண்டில் 867 மாணவர்கள் 3 ஆண்டு பிஎஸ்சி அல்லது 4 ஆண்டு பிஎஸ் பட்டம் பெற்றுள்ளனர். இதில், 150 மாணவர்களின் குடும்ப வருமானம் ரூ. 1 லட்சத்திற்கும் குறைவாகவும், மேலும் 100 மாணவர்கள் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்களாகவும் இருக்கின்றனர். கேட் டேட்டா சயின்ஸ் தேர்வில் முதலிடம் பெற்றவர், டெல்லி எய்ம்ஸ்-ல் இளநிலை மருத்துவம் முடித்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது, என்றனர்.
பிஎஸ் பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ் கூறுகையில், நகரங்களிலிருந்தும், கிராமங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்கள் இப்பாடத்திட்டம் மூலம் தங்கள் எதிர்காலத்தை புதியதொரு கோணத்தில் பார்க்கின்றனர். இது இந்தியாவிற்கும், உலகத்திற்கும் புதிய தலைமுறையை உருவாக்கும் ஒரு வரப்பிரசாதம், என்றார்.
பிளாக்ஸ்டோனின் தென்கிழக்கு ஆசியா பிரைவேட் இக்விட்டி தலைவர் அரவிந்த் கிருஷ்ணன் கூறுகையில், இன்றைய உலகத்தில் தரவுகள் மட்டும் அல்லாமல், அதனைக் கொண்டு முடிவுகளை எடுக்கவும், கொள்கைகளை அமைக்கவும், தொழில்துறைகளை மாற்றவும் பயன்படுத்துகிறோம். இத்தகைய திறன்களை உருவாக்குவதில் சென்னை ஐஐடி எடுத்த முயற்சி ஒரு உலகத் தரம் வாய்ந்த முன்னோடி முயற்சியாகும், என்றார்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.