UPDATED : ஆக 06, 2026 10:24 AM
ADDED : ஆக 06, 2026 10:24 AM
ரவிச்சந்திரன், சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டலத் தலைவர்:
தமிழக அரசின் பட்ஜெட், தொழில் துறை போட்டித்திறன், செயற்கை நுண்ணறிவு சார்ந்த முதலீட்டு வசதிகள் மற்றும் விரிவாக்கத்திற்கு ஏற்ற உட்கட்டமைப்பு ஆகிய அடிப்படை அம்சங்களை வலுப்படுத்துகிறது. பேட்டரி ஸ்டோரேஜ், மேற்கூரை சூரியசக்தி மின் உற்பத்தி, மின் வாகன சார்ஜிங் வசதி ஆகியவை கூடுதல் திட்டங்களாக அல்லாமல், நாட்டின் முன்னணி முதலீட்டு மாநிலமாக, தமிழகத்தை நிலைநிறுத்தும் அம்சங்களாக உள்ளன.
வாசுதேவன், 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம்:
சிறு, குறு, நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்காக, 2,142 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, 10.24 சதவீதம் அதிகம். இதற்காக அரசுக்கு நன்றி. பின்தங்கிய மாவட்டங்களில், புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
சிவசங்கர், எஸ்.ஐ.சி.சி.ஐ., எனப்படும் தென்மாநில வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு மூத்த துணைத் தலைவர்:
புதிய அரசால் தாக்கல் செய்யப்பட்ட, முதல் பட்ஜெட் உட்கட்டமைப்பு, திறன்கள், தொழில்நுட்பம், கல்வி, வெளிப்படையான நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. தமிழகத்தின் பொருளாதார சூழலை விரிவுப்படுத்துவதற்கான முயற்சியை வரவேற்கிறோம்.
ஜெயப்பிரகாசம், கவுரவ ஆலோசகர், தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம்:
பனை மேம்பாட்டு வாரியத்திற்கு, 16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது, ரேஷனில் பாக்கெட்டில் கோதுமை மாவு வழங்குவது போன்றவற்றை வரவேற்கிறோம். பின்தங்கிய மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்காக, இந்த பட்ஜெட்டில், 3,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதில், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு, பெரும்பகுதியை ஒதுக்க வேண்டும்.
