அரசு கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான பட்ஜெட் திட்டங்கள்
அரசு கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான பட்ஜெட் திட்டங்கள்
UPDATED : மார் 15, 2025 12:00 AM
ADDED : மார் 15, 2025 11:00 PM

சென்னை:
அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு புதிய துறைகளில் பட்டப்படிப்புகள் துவக்க உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
*அரசு பல்கலைகளின் நிதி பற்றாக்குறையை குறைக்கும் வகையில், அரசு வழங்கும் தொகுப்பு நிதி, 700 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.
* அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு, மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பம், இயந்திரவியல், மின் வாகன தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பொறியியல் உள்ளிட்ட புதிய துறைகளின் பட்டப் படிப்புகள், வரும் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்படும்.
* பாலிடெக்னிக் கல்லுாரிகளில் உணவு தொழில்நுட்பம், ஆளில்லா வான்கலம் வடிவமைப்பு உள்ளிட்ட துறைகளில், புதிய பட்டய படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்.
* அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், வரும் கல்வியாண்டு முதல், கூடுதலாக 15,000 இடங்கள் ஏற்படுத்தப்படும்.
*தமிழகத்தில் புதுமைப் பெண் தமிழ் புதல்வன் திட்டங்களால், உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதை நிறைவேற்றும் வகையில், 10 இடங்களில் புதிய கலை அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்படும்.
*தமிழக மாணவர்கள், மத்திய அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், 1,000 மாணவர்களுக்கு, முதல்நிலை தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், 10 மாதங்களுக்கு, 7,500 ரூபாய், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 25,000 ரூபாய், முதன்மை தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத்தேர்வுக்கு தயாராவோருக்கு, 50,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். அதற்கு, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
*மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி, கற்றல், கற்பித்தல் சூழலை நவீனமாக்க, 2,000 பள்ளிகளில், 160 கோடி ரூபாயில் கணினி ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும்
*தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் கல்வராயன்மலை, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 14 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
*திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை; புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல்; காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் உட்பட 10 இடங்களில், தலா 4 தொழிற்பிரிவுகள் கொண்ட, புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 152 கோடி ரூபாய் செலவில் துவக்கப்படும்
*கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, திருச்சி, கோவை, தர்மபுரி மாவட்டங்களில், விடுதி வசதிகளுடன் கூடிய, ஏழு புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 148 கோடி ரூபாயில் துவக்கப்படும்
*தமிழ்நாடு மின்னணு நிறுவனம் சார்பில், சென்னையில் 50 கோடி ரூபாயில், 'வியன் ஏ.வி.ஜி.சி. எக்ஸ்.ஆர்.ஹப்' என்ற தொழில்நுட்ப மையம் உருவாக்கப்படும். பின், துணை மையங்கள் கோவை, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி மண்டலங்களில் உருவாக்கப்படும்.
*இரண்டு உலக சாம்பியன்கள், 31 கிராண்ட் மாஸ்டர்களுடன், செஸ் விளையாட்டின் தலைநகராக தமிழகம் உள்ளது. இதை தக்க வைக்கும் வகையில், பள்ளி பாடத்திட்டத்தில், செஸ் விளையாட்டை சேர்க்கும் வகையில் உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றப்படும்
*உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரியும் தமிழக வீரர் - வீராங்கனையருக்கு, 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.