500 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு தொழில் ஊக்குவிப்பு திட்டம்
500 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு தொழில் ஊக்குவிப்பு திட்டம்
UPDATED : டிச 07, 2025 09:06 AM
ADDED : டிச 07, 2025 09:08 AM

சென்னை:
'சென்னை ஐ.ஐ.டி., தொழில் ஊக்குவிப்பு மையம் சார்பில், 500க்கும் அதிகமான 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, தொழில் வளர்ச்சிக்கு உதவிகள் செய்யப்பட்டு உள்ளன' என, ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது.
'ஸ்டார்ட் அப்' எனும் புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, சென்னை ஐ.ஐ.டி.யில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன், தொழில் ஊக்குவிப்பு மையம் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் நோக்கம், புதிய 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள், ஆரம்ப காலம் முதலே வெற்றிக்கு தோள் கொடுப்பதாகும்.
அந்த வகையில், சென்னை ஐ.ஐ.டி. தொழில் ஊக்குவிப்பு மையம், ஓராண்டில், 511 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு தொழில் ஊக்குவிப்பு வழங்கி உள்ளது. இதன் வாயிலாக, 11,000க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என, சென்னை ஐ.ஐ.டி. பெருமிதம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி கூறியதாவது:
பிரதமர் மோடியின், 'வளர்ச்சி அடைந்த பாரதம் - 2047' எனும் இலக்கு, சுயசார்பு இந்தியாவை நோக்கியதாக உள்ளது. இதற்கு, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களின் வளர்ச்சி, மிகவும் அவசியம். இந்த நிறுவனங்களுக்கு, சென்னை ஐ.ஐ.டி., உறுதுணையாக இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

