அங்கீகாரமற்ற கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அங்கீகாரமற்ற கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
UPDATED : செப் 14, 2026 11:46 AM
ADDED : செப் 14, 2026 11:51 AM

சென்னை:
'உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக உயர் கல்வித்துறைக்கு, தமிழக சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்க தலைவர் அஜித் குமார் லால்மோகன், செயலர் சேதுபதி வெளியிட்டுள்ள அறிக்கை:
சமூக வலைதளங்கள் மிகவும் சக்தி வாய்ந்த தகவல் ஊடகமாக மாறியுள்ளன. லட்சக்கணக்கான மாணவர்கள், பொது மக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், படிக்காமலேயே பட்டம் பெறலாம்; தேர்வு எழுதாமலேயே பட்டம் பெறலாம்; குறுகிய காலத்தில் பட்டம் பெறலாம்; முந்தை ஆண்டுகளில் படித்தது போன்று பட்டம் பெறலாம் என, பொது மக்களையும், மாணவர்களையும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள், சமூக வலைதளங்களில் பரவி வருவது கவலை அளிக்கிறது.
பாடப்பிரிவு
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும், உயர் கல்வி குறித்த முழுமையான புரிதல் இல்லாத பெற்றோரும், இது போன்ற விளம்பரங்களை நம்பி, அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ தகுதி குறித்து சரிபார்க்காமல், கல்வி நிறுவனங்களில் சேரும் வகையில், தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.
தமிழக அரசின் அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள், எவ்வாறு மாணவர் சேர்க்கை நடத்த முடியும்; அங்கீகாரம் பெறாத பாடப்பிரிவுகள் குறித்து, எவ்வாறு விளம்பரம் செய்ய முடியும்; சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் இத்தகைய விளம்பரங்களை எவ்வாறு வெளியிடுகின்றனர்?
சில கல்வி நிறுவனங்கள், நிகர்நிலை பல்கலை அந்தஸ்தை பெற்ற பின், அதற்கு முன்பு செயல்பட்ட கல்லுாரி அல்லது கல்வி நிறுவனத்திற்கு கிடைத்த, 'நாக்' மற்றும் என்.பி.ஏ., போன்ற அங்கீகாரங்களை, தற்போது நிகர்நிலை பல்கலைக்கு வழங்கப்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தங்களின் விளம்பரங்களில் பயன்படுத்துகின்றன.
முந்தைய கல்வி நிறுவனத்திற்கு கிடைத்த அங்கீகாரத்தை, நிகர்நிலை பல்கலையின் அங்கீகாரம் என குறிப்பிடுவது அல்லது விளம்பரப்படுத்துவது தவறானது; மாணவர்கள், பெற்றோரை தவறாக வழிநடத்தக்கூடியது.
கல்வி தரம்
தமிழகத்தில், அரசு கல்லுாரிகள், அரசு உதவி பெறும் கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகள் என, உயர் கல்வி நிறுவனங்கள், சட்டப்பூர்வ கட்டமைப்பிற்குள் செயல்பட்டு வருகின்றன.
அதே வேளையில், சில கல்வி நிறுவனங்கள், உரிய உரிமம் இல்லாமல், இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் போன்றவற்றிற்கு மாணவர் சேர்க்கை நடத்தவது, கல்வி தரத்தை பாதிக்கும்.
மாணவர்கள் கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதுகாப்பது, அனைவரின் பொறுப்பு. உயர் கல்வியின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் பாதுகாக்க வேண்டும். உயர் கல்வியில் தரமான கல்வியை வழங்குவதே, தமிழக சுயநிதி கலை மற்றும் மேலாண்மை சங்கத்தின் முக்கிய நோக்கம்.
எனவே, உயர் கல்வித்துறையும் பல்கலையும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் ஆதாரமற்ற விளம்பரங்களை தடுக்கவும், உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
