அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு
அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு
UPDATED : ஆக 12, 2026 04:36 PM
ADDED : ஆக 12, 2026 04:40 PM
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) கோவிந்தராசு வெளியிட்டுள்ள அறிக்கை:
கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இக்கல்லுாரியில், அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கணினி பொறியியல், கணினி சார்ந்த உற்பத்தி தொழில்நுட்பம், ஆட்டோமேசன் மற்றும் ரோபோடிக்ஸ் மற்றும் பொருட்களின் இணையம் ஆகிய பாடப்பிரிவுகளில், மூன்றாண்டு பட்டய படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்கள் முதலாமாண்டிலும், பிளஸ் 2 அல்லது ஐ.டி.ஐ., முடித்த மாணவர்கள் நேரடி இரண்டாமாண்டிலும் சேர்க்கை பெற முடியும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் சேர்க்கை பெறலாம். அரசு பள்ளியில் படித்து இக்கல்லுாரியில் சேரும் மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்திலும், மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டத்திலும் மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படும்.
மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ், கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது. தனித்தனி விடுதி வசதி உள்ளது. இறுதியாண்டில் மாணவ, மாணவியருக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படுகிறது. மூன்றாமாண்டு படிக்கும் போதே, விருப்பமுள்ள மாணவர்கள், 18,000 ரூபாய் உதவித்தொகையுடன், தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி பெறலாம்.
எனவே, இது வரை உயர்கல்வியில் சேர்க்கை பெறாத மாணவ, மாணவியர், தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் நேரில் வந்து சேர்க்கை பெறலாம். கல்லுாரி கட்டணமாக ஆண்டுக்கு, 2,287 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானது. மேலும் விபரங்களுக்கு, 79045 31623, 90803 20850, 94423 84396, 91591 29122, 97917 22281 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
