UPDATED : செப் 01, 2026 05:59 PM
ADDED : செப் 01, 2026 06:00 PM
கோவை:
மாவட்டத்தில் உள்ள தனித்தேர்வு மையங்களில், 2023, 2024ம் ஆண்டுகளில் பொதுத்தேர்வுகளை எழுதிய தனித்தேர்வர்களில், தேர்வு மையங்களில் நேரில் பெற்றுக்கொள்ளப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், கோவை அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
தேர்வுத்துறை விதிமுறைகளின்படி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்தும் பெறப்படாத சான்றிதழ்கள் அழிக்கப்பட வேண்டும். எனவே, இதுவரை அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத தேர்வர்கள், 90 நாட்களுக்குள் அலுவலக பணி நாட்களில் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.
நேரில் வர இயலாதவர்கள், ரூ.70 மதிப்புள்ள தபால் வில்லை ஒட்டிய சுய முகவரியிட்ட உறை, தேர்வரின் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம் மற்றும் தேர்வுக்கூட அனுமதி சீட்டு நகல் ஆகியவற்றை இணைத்து அலுவலகத்திற்கு அனுப்பி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சான்றிதழ்களை பெறத் தவறினால், தேர்வுத்துறை விதிமுறைகளின்படி அவற்றை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
