மம்ப்ஸ் தடுப்பூசி மீண்டும் குழந்தைகளுக்கு போடப்படுமா?
மம்ப்ஸ் தடுப்பூசி மீண்டும் குழந்தைகளுக்கு போடப்படுமா?
UPDATED : பிப் 12, 2025 12:00 AM
ADDED : பிப் 12, 2025 11:57 AM
மதுரை:
நம் நாட்டில், இரண்டாண்டுகளாக குழந்தைகளுக்கு பொன்னுக்கு வீங்கி நோய் பரவ ஆரம்பித்துள்ளதால், நிறுத்தப்பட்ட மம்ப்ஸ் தடுப்பூசியை மத்திய அரசு மீண்டும் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வைரஸ் நோய் தொற்றுகளால், மீசில்ஸ் எனப்படும், தட்டம்மை, மம்ப்ஸ் எனப்படும் பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா எனப்படும் ஜெர்மன் தட்டம்மை நோய்கள் குழந்தைகளை தாக்குகின்றன.
இந்நோய்களில் இருந்து குழந்தைகளை காக்கும் வகையில், மத்திய அரசு, எம்.எம்.ஆர்., எனப்படும், முத்தடுப்பு ஊசியை, 2016க்கு முன்னர் வரை செலுத்தியது. அனைத்து குழந்தைகளுக்கும், 9வது மாதம் மற்றும் ஒன்றரை வயதில் பூஸ்டர் டோஸ் வரை என, இரண்டு முறை முத்தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
சில ஆண்டுகளாக பொன்னுக்கு வீங்கி பரவாத நிலையில், 2016 முதல், மம்ப்ஸ் தடுப்பூசி செலுத்துவதை மத்திய அரசு நிறுத்தியது.
கடந்த, 2016க்குப் பின் தற்போது வரை, எம்.ஆர்., தடுப்பூசி மற்றும் பூஸ்டர் ஊசி செலுத்தப்படுகிறது. தற்போது, நம்நாட்டில் குழந்தைகளுக்கு பரவலாக மம்ப்ஸ் பரவ ஆரம்பித்துள்ளது என்கின்றனர் டாக்டர்கள்.
அவர்கள் கூறியதாவது:
மம்ப்ஸ் வரும் முன் காக்கும் விதமாக, தடுப்பூசி செலுத்தி நோய் பரவாமல் தடுக்கிறோம். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மம்ஸ் பரவிய நிலையில், தற்போது, டீன் ஏஜ் பருவத்தினருக்கும் பரவுகிறது. ஒன்பது மாதத்தில் தடுப்பூசி போடுவது என்பது, ஐந்து வயதுக்குள் மம்ப்ஸ் வராமல் தடுப்பதற்காக தான்.
பெரியவர்களுக்கு வந்தாலும், நோய் குறித்த புள்ளிவிபரங்கள் கணக்கில் எடுக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு தடுப்பூசி கிடையாது. குழந்தைகளுக்கு தான் பாதிப்பு அதிகம் என்பதால் தடுப்பூசி போடப்படுகிறது. இந்நோய் பாதித்தால், உமிழ்நீர் சுரப்பியை வீங்கச் செய்து விடும். உமிழ்நீர் சுரப்பி வறண்டு உடல்நலம் பாதிக்கும். காய்ச்சலுடன் கன்னத்தின் இருபக்கமும் வீங்கி, குழந்தைகள் சாப்பிட முடியாமல் தவிப்பர். நோயிலிருந்து குணமடைய ஒரு வாரம் முதல், 10 நாட்களாகும்.
இந்த தொற்றுக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. மத்திய அரசின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு ஐ.டி.எஸ்.பி., திட்டத்திற்கான idsp.mohfw.gov.in இணையதளத்திலும் இதுகுறித்த தகவல்களை பதிவேற்றம் செய்துஉள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.