மருத்துவ கல்லுாரிகள் வாசலில் கஞ்சா; கவர்னர் ராதாகிருஷ்ணன் வேதனை
மருத்துவ கல்லுாரிகள் வாசலில் கஞ்சா; கவர்னர் ராதாகிருஷ்ணன் வேதனை
UPDATED : மே 21, 2024 12:00 AM
ADDED : மே 21, 2024 09:45 AM
புதுச்சேரி:
புதுச்சேரியில் அனைத்து மருத்துவ கல்லுாரிகளின் வாசலில் கஞ்சா கிடைக்கிறது என, கவர்னர் ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.
கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி அரங்கில் நடந்த, புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த 2 நாள் பயிற்சி முகாமை துவக்கி வைத்து அவர் பேசியதாவது;
நிதித்துறை சீர்திருத்தம், நீதித்துறை சீர்திருத்தம், தேர்தல் சீர்திருத்தம். மூன்று வகையான சீர்திருத்தங்கள் வராமல் இந்தியா வளர்ந்தாலும், அதன் பயன் சாதாரண குடிமகனை அடைவது கடினம். தேர்தல் சீர்திருத்தம் இல்லாமல் ஊழலை ஒழிக்க முடியாது. தேர்தலில் அதிக பணம் செலவழிப்பவர்கள், தோற்கடிக்கப்படுவார்கள் என்ற நிலை உருவாக வேண்டும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொன்னால் கூப்பாடு போடுகிறார்கள். 1967க்கு முன், ஒரே நாடு ஒரே தேர்தல் தான் இருந்தது. அப்போது, நாட்டில் எத்தனையோ அணைகள், பள்ளிகள் தோன்றின. சாதாரண விவசாயியின் மகனும் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.
ஜி.எஸ்.டி. பற்றி குறை சொல்பவர்கள், முந்தைய நிலைமையை சிந்திக்க வேண்டும். இன்று நாடு முழுவதும் வரி வசூல் உயர்ந்திருக்கிறது.
சமுதாயத்தில் எந்த உயரத்தில் இருந்தாலும் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒரு மாற்றத்தை அது தரும். அந்த வழியில் நாம் எடுத்து வைத்திருக்கின்ற முதல் அடிதான் இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள். அது நல்லவர்களைக் காக்கும். நல்லதொரு சமுதாயத்திற்கு அடித்தளமாக அமையும்.
சிறிய மாநிலமான புதுச்சேரியில் அதிக மருத்துவ கல்லுாரிகள் இருக்கின்றன. அதே நேரத்தில் அனைத்து மருத்துவக் கல்லுாரிகளின் வாசலிலும் கஞ்சா எளிதாக கிடைக்கிறது. மருத்துவ கல்லுாரி மாணவர்கள் மனநிலையை மாற்ற முடியாது. ஆனால், கஞ்சா கிடைக்காமல் செய்ய முடியும். அதனை அதிகாரிகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு கவர்னர் பேசினார்.