கோயில் நிலத்தில் வேளாண் கல்லுாரி அமைப்பதற்கு எதிராக வழக்கு
கோயில் நிலத்தில் வேளாண் கல்லுாரி அமைப்பதற்கு எதிராக வழக்கு
UPDATED : பிப் 01, 2025 12:00 AM
ADDED : பிப் 01, 2025 11:05 AM

மதுரை:
கரூர் மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லுாரி அமைக்க கோயில் நிலத்தை கையகப்படுத்தும் அரசாணைக்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
குளித்தலை வலையபட்டி பிரபு தாக்கல் செய்த பொதுநல மனு:
கரூர் சமுதாயக்கூடத்தில் அரசு வேளாண் கல்லுாரி தற்காலிகமாக செயல்படுகிறது. சமுதாயக் கூடத்தில் கல்லுாரி செயல்படுவதால் பயிர் சாகுபடி, மண் வகை கள நிலவரத்தை மாணவர்கள் அறிந்து கொள்ள இயலாது. அவர்களுக்கு சுற்றுச்சூழலுடன் இணைந்த கல்வி அவசியம்.கல்லுாரி அமைக்க கிருஷ்ணராயபுரம் மணவாசியில் மத்யபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தவும், ரூ.7 கோடி 84 லட்சத்து 30 ஆயிரத்து 668 அனுமதித்தும் தமிழக வேளாண் உற்பத்தித்துறை முதன்மை செயலர் 2024 மார்ச் 14ல் உத்தரவிட்டார். அது தகுந்த இடம் அல்ல.
கோயிலுக்கு சொந்தமான இடத்தை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளன. விதி மீறி கோயில் நிலத்தில் கல்லுாரி அமைப்பது ஏற்புடையதல்ல.கோயில் நிலத்தை கையகப்படுத்த பிறப்பித்த அரசாணைக்கு தடை விதித்து ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு வேளாண் உற்பத்திதுறை முதன்மை செயலர், அறநிலையத்துறை கமிஷனர், வேளாண் பல்கலை பதிவாளர், கரூர் கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி பிப்.27 ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.