நர்சிங் மாணவி தற்கொலையில் கல்லுாரி முதல்வர் மீது வழக்கு
நர்சிங் மாணவி தற்கொலையில் கல்லுாரி முதல்வர் மீது வழக்கு
UPDATED : பிப் 07, 2025 12:00 AM
ADDED : பிப் 07, 2025 11:58 AM
ஹரோஹள்ளி:
நர்சிங் கல்லுாரி மாணவி தற்கொலையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. கல்லுாரி முதல்வர், நிர்வாகம் மீதும் வழக்கு பதிவாகி உள்ளது.
கேரளாவின் கண்ணுாரை சேர்ந்தவர் அனாமிகா, 19. பெங்களூரு ரூரல் ஹரோஹள்ளியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் முதலாம் ஆண்டு படித்தார். கடந்த 4ம் தேதி இரவு கல்லுாரி விடுதி அறையில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கடைசியாக எழுதிய கடிதத்தில், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
நேற்று முன்தினம் ஹரோஹள்ளி போலீஸ் நிலையத்தில் அனாமிகாவின் தந்தை வினித்குமார் அளித்த புகாரில், கடந்த மாதம் கல்லுாரி விடுமுறையில் வீட்டிற்கு வந்த எனது மகள், கல்லுாரி நிர்வாகம் தனக்கு தொல்லை கொடுக்கிறது. என்னால் படிக்க முடியவில்லை என்று கூறினார்.
ஒரு பாடத்தில் எனது மகள் மதிப்பெண் குறைவாக எடுத்து இருந்தார். இதனால் அவரை கருப்பு பட்டியலில் சேர்க்க போவதாக மிரட்டி உள்ளனர். தேர்வில் தோல்வி அடைந்தால் முழு கட்டணத்தையும் ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என்றும் துன்புறுத்தி உள்ளனர். எனது மகள் சாவுக்கு கல்லுாரி முதல்வர் சாந்தம் ஸ்வீட்டா ரோஸ், நிர்வாகம் தான் காரணம் என்று, கூறி இருந்தார். இதன்படி, கல்லுாரி முதல்வர், நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அனாமிகா தற்கொலையை கண்டித்து நேற்று காலையில் கல்லுாரி முன்பு சக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். கேரள மாணவர்களை கல்லுாரி நிர்வாகம் மோசமாக நடத்துவதாக குற்றஞ்சாட்டினர்.
மேலும், காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிரிஷ்மா போன்று, நீ யாருக்கு விஷம் கொடுக்க வந்து இருக்கிறாய் என்று அனாமிகாவை பார்த்து கல்லுாரி ஊழியர்கள் சிலர் கிண்டல் செய்ததாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டினர். இதுபற்றியும் போலீசார் விசாரிக்கின்றனர்.