பள்ளிகளில் மருத்துவ முகாம் நடத்த வழக்கு: கோர்ட் அபராதம்
பள்ளிகளில் மருத்துவ முகாம் நடத்த வழக்கு: கோர்ட் அபராதம்
UPDATED : ஜூலை 16, 2025 12:00 AM
ADDED : ஜூலை 16, 2025 08:16 AM
மதுரை :
தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் இலவச மருத்துவ முகாம் நடத்த தாக்கலான வழக்கில், ஏற்கனவே மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது, என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதி செய்து தரமான உணவு வழங்க வேண்டும். போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இப்பள்ளி மாணவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை இலவச மருத்துவ முகாம்நடத்த வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்டறிந்து சத்து மாத்திரைகள் வழங்க வேண்டும். தேவையான தடுப்பூசிகள் செலுத்த வலியுறுத்தி மத்திய, மாநில சுகாதாரத்துறை செயலர்கள், மாநில பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
அரசு பிளீடர் திலக்குமார்: ஆண்டுக்கு ஒருமுறை பெற்றோர் ஒப்புதலுடன் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. ஊட்டச்சத்து, குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அவசியமான நேரங்களில் உடனடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மருத்துவ முகாம் ஏற்கனவே நடத்தப்படுகிறது. அதை பயன்படுத்திக் கொள்வதா, இல்லையா என்பது மாணவர்கள், பெற்றோரின் விருப்பத்தை பொறுத்தது. இதில் வழக்கு தொடர மனுதாரருக்கு முகாந்திரம் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.5000 அபராதம் விதிக்கிறோம். அதை உயர்நீதிமன்றக் கிளை சட்டப் பணிகள் ஆணைக்குழுவிற்கு செலுத்த வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து ஜூலை 28 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.