கல்லுாரிக்கு காவிரி நீர்: மாஜி மீது அமைச்சர் புகார்
கல்லுாரிக்கு காவிரி நீர்: மாஜி மீது அமைச்சர் புகார்
UPDATED : மே 03, 2024 12:00 AM
ADDED : மே 03, 2024 11:53 AM
புதுக்கோட்டை :
புதுக்கோட்டையில், கோடை கால சிறப்பு தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ., முத்துராஜா ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.
பின், அமைச்சர் ரகுபதி கூறியதாவது:
மாவட்ட கலெக்டர்களிடம் மணல் குவாரி முறைகேடு குறித்து விசாரணை நடத்தி, அமலாக்கத்துறை அறிக்கை பெற்றுள்ளது. இந்த விசாரணையின் போக்கு ஜூன் 4ம் தேதிக்கு பின் எவ்வாறு செல்கிறது என்பதை பார்ப்போம்.
குஜராத் என்பது போதை பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப்பொருள் வருகிறது. பின், பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோளப்பொறி போல என, எங்கள் தலைவர் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், குடிநீர் பிரச்னைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டு விட்டார்.
புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழி மறித்து அவரது கல்லுாரிக்கும், அவரது வயலுக்கும் கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரி தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும் தான்.
இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால், அதை பார்க்கலாம். இது குறித்து, நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவர். அவராலே பாதி காவிரி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.
இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், அந்த பிரச்னை குறித்து நடவடிக்கை எடுப்பர். முதல்வர் ஸ்டாலின் வட மாநிலங்களுக்கு பிரசாரத்திற்கு செல்வது வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.