சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு: அரசு பள்ளிகள் சாதனை
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு: அரசு பள்ளிகள் சாதனை
UPDATED : மே 14, 2026 06:05 PM
ADDED : மே 14, 2026 06:07 PM
புதுடில்லி:
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், டில்லி அரசு பள்ளிகளில் படித்த 94.44 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தனியார் பள்ளிகளில், 88.77 சதவீதம் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடை நிலைக் கல்வி வாரியம், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை நேற்று வெளியிட்டது.
தனியார் பள்ளி டில்லி அரசு பள்ளிகளில் படித்தவர்களில், 94.44 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில், மாணவியர் 96.10 சதவீதமும், மாணவர்கள் 92.49 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில், 88.77 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 91.43; மாணவர்கள் 86.79 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என, ஒட்டுமொத்தமாக, டில்லியில் 92.10 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில், மாணவர்களை விட மாணவியர், 6.73 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக, மாணவியர் 88.86; மாணவர்கள் 82.13 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
டில்லி மண்டலத்தில் மூன்று லட்சத்து 1,977 மாணவ, மாணவியர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். அதில், மூன்று லட்சத்து 732 பேர் தேர்வு எழுதி, இரண்டு லட்சத்து 76,583 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். டில்லி, கிழக்கு மண்டலம் - 91.73; மேற்கு மண்டலம் - 92.34, சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு முதல், மாணவர்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை குறைக்க, முதலிடம் பெற்றவர் குறித்த விபரத்தை சி.பி.எஸ்.இ., வெளியிடவில்லை. இருப்பினும், தலைநகர் டில்லியில் உள்ள பல பள்ளிகள், தங்கள் பள்ளிகளில் படித்து முதலிடம் பிடித்துள்ள மாணவ மாணவியர் குறித்து அறிவித்துள்ளன.
டி.பி.எஸ்., துவாரகா பள்ளி மாணவர் தேக்னுார் சிங் என்பவர், வணிகவியலில் 99.4 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். அறிவியலில், உப்ராஜ் பேடி என்பவர் 97.8 சதவீதமும், மானுடவியலில் சமாஜ்யா சிங் மற்றும் ஆர்னா அரோரா ஆகிய இருவரும், தலா, 97 சதவீத மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.
டி.பி.எஸ்., வசந்த் கஞ்ச்சில், விவான் ஷர்மா என்பவர் அறிவியலில் 98.6, தேவினா கெலாட் என்ற மாணவி மானுடவியலில் 98, அனுஸ்ரீ திவாரி என்ற மாணவி வணிகவியலில் 96.4 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மதிப்பெண்
துவாரகா, ஐ.டி.எல்., சர்வதேச பள்ளியில், பிரியான்ஷ் மெஹ்ரா என்ற மாணவர் அறிவியலில் 98.25, விராஜ் கத்துாரியா மற்றும் அக் ஷத் ஷா ஆகியோர் வணிகவியலில், தலா, 98.25, வீனஸ் சர்மா என்ற மாணவர், மானுடவியலில் 97.5 சதவீத மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.
கிழக்கு கைலாஷ், தாகூர் சர்வதேசப் பள்ளியில், அறிவியலில் ஜைனா 97.25, மானுடவியலில் உன்னதி கோலானி 96.75, வணிகவியலில் ஆயுஷ் கன்னா 96.5 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
