UPDATED : ஆக 18, 2025 12:00 AM
ADDED : ஆக 18, 2025 04:41 PM

சென்னை:
போலி சான்றிதழ்கள் வினியோகிக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.
பள்ளிகளின் உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை உள்ளிட்டவற்றை, திடீர் ஆய்வுகளின் வாயிலாக சி.பி.எஸ்.இ., கண்காணிக்கத் துவங்கி உள்ளது. அதேசமயம், சி.பி.எஸ்.இ., சார்பில் வழங்கப்பட்டுள்ள கல்வி சான்றிதழ்களில், சில நபர்களும், நிறுவனங்களும் திருத்தம் செய்து தருவதாகவும், அதற்கு பெரும் தொகை வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், உரிய கல்வி நிறுவனங்களின் பரிந்துரை மற்றும் சி.பி.எஸ்.இ., தலைமை அலுவலகத்தின் ஒப்புதல் இல்லாமல் வழங்கப்படும் சான்றிதழ்கள் செல்லாது. அவ்வாறான முறைகேட்டில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து புகார் அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதனால், மாணவர்களும், பெற்றோரும், போலி நிறுவனங்களின் கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி, பணத்தையும், எதிர்காலத்தையும் இழக்க வேண்டாம் என, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.
மேலும், சி.பி.எஸ்.இ.,யின் https://www.cbse.gov.in என்ற இணையதளத்திலும், பிராந்திய அலுவலகம் சார்பிலும் வெளியாகும் அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும். சான்றிதழ்களில் திருத்தம் செய்ய உரிய கல்வி நிறுவனங்கள் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.