பட்டியலின பிரிவில் மருத்துவ கலந்தாய்வில் மாணவியை அனுமதிக்க சென்டாக்க்கு உத்தரவு
பட்டியலின பிரிவில் மருத்துவ கலந்தாய்வில் மாணவியை அனுமதிக்க சென்டாக்க்கு உத்தரவு
UPDATED : அக் 24, 2024 12:00 AM
ADDED : அக் 24, 2024 10:08 AM

சென்னை :
பட்டியலின மாணவியின் ஆவணங்களை பரிசீலித்து மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை, சென்டாக் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீநிஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
எனது தந்தை தமிழகத்தையும், தாய் புதுச்சேரியையும் பூர்வீகமாக கொண்டவர்கள். ஹிந்து ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள். நீட் தேர்வில், 385 மதிப்பெண் பெற்று, மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தேன். பொது பிரிவு ஒதுக்கப்பட்டது. தாய்க்கு, புதுச்சேரி பூர்வீகம் என்பதால், அதன் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வில் பட்டியலின பிரிவில் விண்ணப்பித்தேன். விண்ணப்பத்தை, சென்டாக் நிராகரித்தது. அந்த உத்தரவை ரத்து செய்து, மருத்துவ கலந்தாய்வில் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மருத்துவ படிப்பு இடங்களுக்கான கலந்தாய்வு முடிந்து, தகுதி பட்டியல் வெளியானதால், எந்த விண்ணப்பத்தையும் ஏற்க முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, ஸ்ரீநிஜா மேல்முறையீடு செய்தார். மனு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மேல்முறையீடுதாரர் மருத்துவ படிப்புக்கு தகுதியானவர். அவர் கோரிய சான்றிதழை, வருவாய் அதிகாரிகள் காலதாமதமாக வழங்கியுள்ளனர். அதனால், அவர் கோரிய பிரிவில் மாணவிக்கு வாய்ப்பு வழங்கப் படவில்லை. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. நீட் அடிப்படையிலான மருத்துவ சேர்க்கைக்கான தகவல் சிற்றேட்டின்படி, தகுதி பட்டியல் வெளியானாலும், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும்போது, தகுதிப் பட்டியலை புதுப்பிக்க, சென்டாக் அதிகாரம் உள்ளது என்பது தெளிவாகிறது. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
மாணவி ஸ்ரீநிஜாவின் ஜாதி சான்று உள்ளிட்ட ஆவணங்களை பரிசீலித்து, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை, சென்டாக் நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.