UPDATED : நவ 10, 2025 07:54 AM
ADDED : நவ 10, 2025 07:54 AM

கோவை:
பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும், கட்டாயமாக ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற, உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை தொடர்ந்து, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தெளிவான வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என, அனைத்திந்திய தேசிய ஆசிரியர் மஹாசங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்க உறுப்பினர்கள் கூறியதாவது:
தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், 23.08.2010 அன்று வெளியிட்ட அறிவிப்பில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 (ஆர்.டி.இ.,) படி, வகுப்பு 1 முதல் 8 வரை ஆசிரியராக நியமிக்கப்படுவதற்கு, டெட் தேர்ச்சி பெற்றிருப்பது, குறைந்தபட்ச தகுதியாக குறிப்பிடப்பட்டது.
ஆனால், சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு, கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகளுடன் நியமிக்கப்பட்ட அனுபவமுள்ள ஆசிரியர்களையும் பாதிக்கும் வகையில் உள்ளது. இதனால், நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் ஆசிரியர்களின் சேவை கேள்விக்குறியாகிஉள்ளது.
ஒவ்வொரு மாநிலமும் குழந்தைகள் கல்வி உரிமைச் சட்டத்தை, தனித்தனியாக ஏற்றுக்கொண்டதால், அந்த மாநில அரசிதழ் அறிவித்த தேதியே, டெட் தேர்ச்சி கட்டாயத் தகுதிக்கான, 'கட்- ஆப்' தேதியாக கருதப்பட வேண்டும். இல்லையெனில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணி நீக்கம் அல்லது பதவி உயர்வு தடை போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

