தமிழகத்தில் 18 மாவட்டங்களில் சி.இ.ஓ.,க்கள் பணியிடம் காலி
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் சி.இ.ஓ.,க்கள் பணியிடம் காலி
UPDATED : செப் 27, 2025 09:49 AM
ADDED : செப் 27, 2025 09:52 AM

மதுரை:
இக்கல்வியாண்டில் காலாண்டுத் தேர்வு முடிந்த நிலையிலும், தமிழகத்தில் 18 மாவட்டங்களில் சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பள்ளி ஆய்வுகளுடன் நிர்வாகப் பணிகளும் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறையில் பள்ளிகள் ஆய்வு, கற்றல் கற்பித்தல் தொடர்பான கண்காணிப்பு, மாணவர்களுக்கான நலத் திட்டங்கள் வினியோகம் ஆகியவற்றில் மாவட்ட சி.இ.ஓ.,க்கள் பங்கு முக்கியம். ஆனால் இக்கல்வியாண்டு துவக்கம் முதல் பல மாவட்டங்களில் சி.இ.ஓ.,க்கள் பணியிடம் காலியாக உள்ளன. கிருஷ்ணகிரியில் ஓராண்டாக காலியாக உள்ளது.
இதுதவிர தஞ்சை, மயிலாடுதுறை, தேனி, திருப்பூர், நாகபட்டினம், நீலகிரி, ராணிப்பேட்டை, வேலுார் என 18 மாவட்டங்களில் இரண்டு மாதங்களாக சி.இ.ஓ.,க்கள் இல்லை. காலாண்டு தேர்வுகள் முடிந்த நிலையிலும் பணியிடம் நிரப்புவதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை.இதனால் சி.இ.ஓ.,க்கள் பணிகளை டி.இ.ஓ.,க்கள் கூடுதலாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அவர்கள் இரட்டைப் பணிச்சுமையில் சிக்கி தவிக்கின்றனர். இதன் விளைவு மாணவர்கள் கற்றல் அடைவுத் திறன் (சிலாஸ்) தேர்வில் எதிரொலித்துள்ளது. பல மாவட்டங்கள் பின்தங்கியுள்ளன.
அமைச்சர் உத்தரவு காற்றில்...
இது குறித்து ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
கல்வித்துறையில் ஆசிரியர், மாணவர்கள், அரசு பள்ளிகள் நலன்சார்ந்த எந்த கோரிக்கைகளையும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. சங்கங்கள் தொடர்ந்து போராடும் நிலை தான் உள்ளது. இத்துறை அமைச்சர் மகேஷ், மதுரையில் நடந்த கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் 'துறை தொடர்பாக நாளிதழ்கள் செய்திகள் வெளியாகும் போது அதுகுறித்து உடன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டார். ஆனால் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர் உத்தரவை அதிகாரிகள் காற்றில் பறக்கவிடுகின்றனர்.
முக்கியமாக ரூ.பல கோடிகளில் மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படுவதில் சி.இ.ஓ.,க்கள் பங்கு முக்கியமானது. ஆனாலும் 50 சதவீதம் சி.இ.ஓ., பணியிடம் காலியாக உள்ளன. பள்ளி ஆய்வுகள், உதவிபெறும் பள்ளிகளுக்கு அங்கீகாரம், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குதல், மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பணப்பலன்கள் வழங்குவது உள்ளிட்ட பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.
அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் டி.இ.ஓ.,க்கள் நியமனத்தில் இனச்சுழற்சியை முறையாக பின்பற்றவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனால் சி.இ.ஓ., பதவி உயர்வு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் அதற்கும் தீர்வு கிடைத்து பின்னரும் சி.இ.ஓ.,க்கள் நியமனத்தில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாதது அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும். எனவே காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்கு முன் இப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.