தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ செமிகண்டக்டர் தயாரிப்பில் இந்தியா சந்திக்கும் சவால்கள்!

செமிகண்டக்டர் தயாரிப்பில் இந்தியா சந்திக்கும் சவால்கள்!

செமிகண்டக்டர் தயாரிப்பில் இந்தியா சந்திக்கும் சவால்கள்!


UPDATED : ஜூன் 11, 2026 01:41 PM

ADDED : ஜூன் 11, 2026 01:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 11, 2026 01:41 PM ADDED : ஜூன் 11, 2026 01:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது மண்ணில் செமிகண்டக்டர் சிப்களை வடிவமைப்பது, தயாரிப்பது மற்றும் பேக்கேஜிங் செய்வது ஆகியவை இப்போது சாத்தியமாகிவிட்டன. ஆனால், அவற்றுக்கான ஒரு வலுவான உள்நாட்டு தகவமைப்பை உருவாக்குவது தான் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள, 'வெர்வ்செமி' நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரதாப் நாராயண் சிங், ஒரு சிறிய சிப்பை எடுத்து காட்டுகிறார். “இது எடை போடும் எந்திரங்களுக்கான சிப். இந்தியாவுக்கு ஆண்டுக்கு 500 கோடி சிப்கள் தேவை. ஆனால், இப்போது வரை இவை அனைத்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன,” என்கிறார்.

அவரது நிறுவனத்தை சேர்ந்த ராகேஷ் மாலிக், 'இஸ்ரோ'வுக்காக தயாரித்த ஒரு சிப்பை சுட்டிக்காட்டி, “இந்த சிப்பின் எடைக்கு நிகரான தங்கத்தை விட, இதன் மதிப்பு பல மடங்கு அதிகம்,” என்று கூறுகிறார்.

2 ஆண்டுகள் பயணம்!

ஒரு சிப் வடிவமைக்கப்பட்டு வாடிக்கையாளரிடம் சென்று சேர இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. வடிவமைப்பு மற்றும் இறுதி பணிகள் மட்டுமே இந்தியாவில் நடக்கின்றன. இடைப்பட்ட அனைத்து உற்பத்தி பணிகளும் தைவான், கொரியா போன்ற வெளிநாடுகளிலேயே நடக்கின்றன.

செமிகண்டக்டர் மதிப்பில், 50 சதவீதம் வரை அதன் வடிவமைப்பிலேயே உள்ளது. உலகளவில் சிப் வடிவமைப்பில் 20 சதவீத பொறியாளர்கள் இந்தியர்களே. ஆனாலும், உள்நாட்டில் தயாராகாதது குறையே.

ஸ்மார்ட் மீட்டர்


இந்தியாவில் ஆண்டுதோறும் 5 கோடி மின்சார 'ஸ்மார்ட் மீட்டர்கள்' பொருத்தப்படுகின்றன. இவற்றுக்கான சிப்கள் அனைத்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. வெர்வ்செமி நிறுவனம் இதற்கான உள்நாட்டு சிப்பை தயாரித்துள்ளது. ஆனால், அந்த சிப், இந்திய மீட்டரை சென்றடைவதற்கான சந்தை இணைப்பு இன்னும் உருவாக்கப்படவில்லை.

இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் உள்ள மற்றொரு பிரதான குறை, தயாரிப்பு நிறுவனங்கள் இல்லாததே ஆகும். சிப் வடிவமைப்பாளர்களுக்கும் அவற்றை பயன்படுத்தும் வாகன மற்றும் மின்னணு உற்பத்தி நிறுவனங்களுக்கும் இடையே ஒரு பாலம் போல செயல்படும் நிறுவனங்களை தான், 'புராடக்ட் கம்பெனி' என்கிறோம் (எ.கா: குவால்காம், பிராட்காம், மீடியாடெக்).

நம் நாட்டை பொறுத்தவரை சிப் வடிவமைப்பாளர்களும் உள்ளனர், வாடிக்கையாளர்களான உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன. ஆனால், இவற்றை இணைக்கும் இந்த இடைநிலை நிறுவனங்கள் இல்லாதது, உள்நாட்டு சிப்கள் பெரிய அளவில் சந்தையை சென்றடைவதற்கும், வர்த்தக ரீதியான விற்பனை அளவை எட்டுவதற்கும் மிகப்பெரிய தடையாக உள்ளது.

ஐ.எஸ்.எம்., 1.0


மத்திய அரசு 2021ல் 76,000 கோடி ரூபாய் செலவில், 'ஐ.எஸ்.எம்.,' எனும் திட்டத்தை தொடங்கியது. டாடாவின் தோலேரா ஆலை தைவானின் பி.எஸ்.எம்.சி., நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. பேக்கேஜிங் துறையில் மைக்ரான், சி.ஜி., செமி, மற்றும் கெய்ன்ஸ் செமிகான் ஆகியவை குஜராத்தில் இயங்குகின்றன.

அஸ்ஸாமில் டாடாவின் ஓசாட் ஆலையும், உ.பி.,யில் ஹெச்.சி.எல்., பாக்ஸ்கான் ஆலையும் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் டி.எல்.ஐ., நிறுவனங்கள் தலா 100 கோடி ரூபாய் முதல் 150 கோடி ரூபாய் வரை முதலீடுகளை ஈர்த்துள்ளன. மைண்ட் குரோவ் இந்தியாவின் முதல் வணிகரீதியான, 'ரிஸ்க் வி' சிப் ரகமான 'செக்யூர் ஐ.ஓ.டி., எஸ்2401'ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

சவால்கள்


ஒரு 28 நானோமீட்டர் சிப் தயாரிப்புக்கான முழு 'மாஸ்க்' செட் தயாரிக்க, 19 கோடி ரூபாய் வரை செலவாகும். இந்திய பேக்கேஜிங் நிறுவனங்களின் கட்டணம் வெளிநாடுகளை விட 3 முதல் 5 மடங்கு அதிகமாக உள்ளது. ஏனெனில், உள்நாட்டு நிறுவனங்களின் ஆர்டர் அளவு மிகவும் குறைவு.

ரிசர்வ் வங்கியின் 'பில் ஆப் என்ட்ரி' விதியின்படி, வெளிநாட்டில் முதலீடு செய்யப்படும் டாலருக்கு நிகரான பொருட்கள் 2 - 3 ஆண்டுகளில் இந்தியா வர வேண்டும். ஆனால், சிப் தயாரிப்புக்கான மாஸ்க் வெளிநாட்டு ஆலையிலேயே இருக்க வேண்டும் என்பதால், இது இந்திய நிறுவனங்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. பெங்களூருவில் சிப் டிசைனர்களின் சம்பளமும் அமெரிக்காவிற்கு நிகராக உயர்ந்துள்ளதால் செலவு அதிகரித்துள்ளது.

இந்தியா, பேப்லெஸ், பேக்கேஜிங், பேப் என்று மூன்று செமி கண்டக்டர் அடுக்குகளை உருவாக்கியது. அதாவது, கட்டமைப்பு இருக்கிறது. ஆனால் இம்மூன்று அடுக்குகளுக்கு இடையே இணைப்பு பாலம் இல்லை.

பேப்கள் கட்டப்படுகின்றன. ஆனால், அவை இந்திய பேப்லெஸ் நிறுவனங்களுக்கு போட்டி விலையில் சேவை செய்வது குறித்த பேச்சு இன்னும் தொடங்கவில்லை. பேக்கேஜிங் ஹவுஸ்கள் வெளிநாட்டு ஆர்டர்களை பெறுகின்றன.

அவற்றை இந்திய பேப்லெஸ் நிறுவனங்களுக்கு போட்டி விலையில் வழங்க இன்னும் தயாராக இல்லை. பேப்லெஸ் நிறுவனங்கள், தங்களது உற்பத்தியில் பெரும்பகுதியை வெளிநாட்டு பவுண்டரிகளுக்கு அனுப்புகின்றன.

இந்த இடைவெளியை சரி செய்ய முடியுமா, என்றால் நிச்சயம் முடியும். ஆனால், அதற்கான கால அவகாசம் மிகக்குறைவாக இருக்கிறது.

சிறப்பம்சங்கள்


அரசின் டி.எல்.ஐ., திட்டத்தின் கீழ் 24 உள்நாட்டு சிப் வடிவமைப்பு 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் நிதியுதவி பெற்றுள்ளன.

ஒரு முழுமையான செமிகண்டக்டர் தயாரிப்பில், சிப் வடிவமைப்புக்கு மட்டுமே 50 சதவீத பங்கு உண்டு.

உலகளவில் பணிபுரியும் சிப் வடிவமைப்பு பொறியாளர்களில் கிட்டத்தட்ட 20 சதவீதம் பேர், இந்தியர்கள் ஆவர்.

குஜராத்தில் அமைய உள்ள டாடாவின் மெகா ஆலை, 2026 டிசம்பருக்குள் முதல் சிலிகான் சிப்பை தயாரிக்க உள்ளது.

உள்நாட்டு ஆர்டர்களின் அளவு குறைவாக இருப்பதால், இந்திய பேக்கேஜிங் ஆலைகளின் கட்டணங்கள் வெளிநாடுகளை விட 3 முதல் 5 மடங்கு அதிகமாக உள்ளன.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் மற்றும் சுங்கத்துறை நடைமுறைகள் சிப் உற்பத்தியில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us