சந்திரயான் - 3 தரையிறங்கிய பகுதி நிலவின் பழமையான பள்ளமாம்!
சந்திரயான் - 3 தரையிறங்கிய பகுதி நிலவின் பழமையான பள்ளமாம்!
UPDATED : செப் 30, 2024 12:00 AM
ADDED : செப் 30, 2024 11:48 AM
புதுடில்லி:
நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் - 3 விண்கலம் தரையிறங்கிய பகுதி, மிகவும் பழமையான பள்ளம் என்பது தெரியவந்துள்ளது. இது, நிலவு தொடர்பான ஆய்வில் புதிய தகவலாகும்.
நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் - 3 விண்கலம், நிலவின் தென்பகுதியில், 2023 ஆக., 23ல் தரையிறங்கியது. இந்த இடத்துக்கு சிவசக்தி புள்ளி என்று பெயரிடப்பட்டுள்ளது. விண்கலத்தில் அனுப்பப்பட்ட பிரஜ்ஞான் எனப்படும் ரோவர் சாதனம், நிலவின் மேற்பரப்பில் பயணித்து ஆய்வு செய்தது.
புதிய தகவல்கள்:
இது தொடர்பாக பெறப்பட்ட புகைப்படங்கள், தகவல்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. இதில், நிலவின் மிகவும் பழமையான, கிரேட்டர் எனப்படும் பள்ளத்தில், சந்திரயான் - 3 விண்கலம் தரையிறங்கியது தெரியவந்துள்ளது. இதில் இருந்து, நிலவு எவ்வாறு பல மாற்றங்களை சந்தித்தது என்பது தொடர்பாக பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
இது குறித்து, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு, ஆமதாபாதில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் எஸ்.விஜயன் கூறியுள்ளதாவது:
சந்திரயான் - 3 விண்கலம் இறங்கிய பகுதி, நிலவின் மிகவும் பழமையான பள்ளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதற்கு முன் இந்தப் பகுதியில் எந்த நாட்டின் விண்கலங்களும் சென்றடைந்ததில்லை.
இந்த பள்ளம், நெக்டேரியன் காலத்தைச் சேர்ந்தது. அதாவது, 385 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாக இருக்கும். நிலவின் மீது, விண்வெளியில் இருக்கும் விண்கலங்கள் மோதும்போது இதுபோன்ற பள்ளம் ஏற்படும். கிரேட்டர் எனப்படும் இதுபோன்ற பள்ளங்கள் அதிகபட்சம், 300 கி.மீ., விட்டம் கொண்டவை. அதே நேரத்தில், இம்பாக்ட் பேசின் எனப்படும் பெரும் பள்ளங்கள், 300 கி.மீ.,க்கு மேற்பட்ட விட்டங்களை கொண்டதாகும்.
சந்திரயான் - 3 தரையிறங்கிய பள்ளம், ஒரு அரை வட்டமாக உள்ளது. அது, 160 கி.மீ., விட்டத்தையே கொண்டுள்ளது. இதில் இருந்து, அதற்கு அருகில் உள்ள தெற்கு போல்அடிகின் பேசின் எனப்படும் இம்பாக்ட் பேசின் உருவானபோது, எஜக்டா எனப்படும் அந்த பெரும்பள்ளம் உருவாகி சிதறிய பொருட்கள், இந்த பள்ளத்தின் ஒரு பகுதியை மூடியுள்ளது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து ஆய்வு:
உதாரணத்துக்கு, ஒரு பந்து மண்ணில் விழும்போது, அங்கு பள்ளம் ஏற்படும். அப்போது அந்தப் பள்ளத்தில் இருக்கும் மணல் சிதறி, வெளியேறும். அதுபோலவே, தெற்கு போல்அடிகின் பேசின் உருவானபோது அதில் இருந்து சிதறிய பொருட்கள், சந்திரயான் - 3 தரையிறங்கிய பள்ளத்தின் ஒரு பகுதியை மூடியிருக்க வேண்டும்.
இதிலிருந்து, சந்திரயான் - 3 தரையிறங்கிய பள்ளம் மிகவும் பழமையானது என்பது தெரியவருகிறது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.