வரும் 25ல் முதல்வர் திறனாய்வு தேர்வு; ஹால் டிக்கெட் வினியோகம்
வரும் 25ல் முதல்வர் திறனாய்வு தேர்வு; ஹால் டிக்கெட் வினியோகம்
UPDATED : ஜன 22, 2025 12:00 AM
ADDED : ஜன 22, 2025 08:50 AM

உடுமலை:
முதல்வர் திறனாய்வு தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.
அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் முதல்வர் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை, உயர்கல்வி பயில அரசால் வழங்கப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க, 2024 டிச., மாதம் அழைப்பு விடுக்கப்பட்டது.
திறனாய்வு தேர்வு வரும், 25ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலுடன் கூடிய வருகைத்தாள்கள், தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தேர்வுக்கான ஹால்டிக்கெட்களையும் மேற்கண்ட வலைதளத்தில் இருந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டுகளை வினியோகம் செய்து, தேர்வு மையம் குறித்த விபரங்களை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், தலைமை ஆசிரியர் ஹால் டிக்கெட்டில் சிவப்பு நிற மைய பேனாவால் திருத்தி கொள்ளலாம்.
முதல்வர் திறனாய்வு தேர்வில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறும். முதல் தாளில் கணிதம் தொடர்பாக, 60 வினாக்களும், இரண்டாம் தாளில் அறிவியல், சமூக அறிவியல் தொடர்பாக, 60 வினாக்களும் இடம் பெறும்.
வரும், 25ம் தேதி காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை முதல் தாள் தேர்வும், மதியம், 2:00 மணி முதல், 4:00 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு நடத்தப்பட உள்ளது.