UPDATED : ஜன 16, 2025 12:00 AM
ADDED : ஜன 16, 2025 11:16 AM

சென்னை:
திருவள்ளுவர் திருநாளையொட்டி, தமிழறிஞர்களுக்கு, 10 விருதுகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில், 2024 மற்றும், 2025ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.
திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்றவர்களுக்கு, 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 1 சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்பட்டன.
பெரியார், அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய், 1 சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை; முத்தமிழறிஞர் கலைஞர் விருது பெற்றவருக்கு, 10 லட்சம் ரூபாய், 1 சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்பட்டன. விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் சாமிநாதன், மெய்யநாதன், மதிவேந்தன், தலைமை செயலர் முருகானந்தம், சிறுபான்மையினர் நலத்துறை செயலர் விஜய ராஜ்குமார், தமிழ் வளர்ச்சித்துறை செயலர் ராஜாராமன், செய்தித்துறை இயக்குனர் வைத்திநாதன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
திருக்குறள் படத்தின் பாடல் வெளியீடு
ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள, திருக்குறள் படத்தின் முதல் பாடலை, நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சாமிநாதன், மெய்யநாதன், மதிவேந்தன், வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பாலகிருஷ்ணன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.