10 அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
10 அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
UPDATED : அக் 25, 2025 10:37 AM
ADDED : அக் 25, 2025 10:40 AM

புதுச்சேரி:
சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் 10 அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறை திட்டத்தை, காணொலி காட்சி வாயிலாக, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
சென்னை இண்டஸ் டவர்ஸ் லிமிடெட் மற்றும் என்.ஐ.ஐ.டி. அறக்கட்டளை இணைந்து பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 10 அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கல்மண்டபம் தியாகி தியாகராஜ நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளி, சேலியமேடு கவிஞரேறு வாணிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி, குருவிநத்தம் கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி, வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளி, அரும்பார்த்தபுரம் திரு.வி.க. அரசு உயர்நிலைப் பள்ளி, பிள்ளையார்குப்பம் நேதாஜி சுபாஷ் அரசு உயர்நிலைப் பள்ளி, மற்றும் திருபுவனை, மங்கலம், கணுவாபேட், பனித்திட்டு என, 10 அரசு உயர்நிலைப் பள்ளிளுக்கு கம்ப்யூட்டர், பிரிண்டர், எல்.இ.டி., ஸ்மார்ட் டி.வி.,வெப் கேமரா, கம்யூட்டர் மேஜை மற்றும் நாற்காலி வெயிட் போர்டு வழங்கப்பட்டன.
இந்த ஸ்மார்ட் வகுப்பறைகளை, முதல்வர் ரங்கசாமி நேற்று சட்டசபையில் இருந்து காணொலி காட்சி வாயிலாகி திறந்து துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர்களிடம் 'ஸ்மார்ட்' வகுப்பறைகளுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.
இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் கல்வி மேம்படுத்தப்படுவதோடு, 844க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு டிஜிட்டல் எழுத்தறிவை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., சமக்ர சிக் ஷாவின் மாநில திட்ட இயக்குநர் எழில் கல்பனா, இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் தலைமை செயல் அதிகாரி ஹர்விந்தர் பால் சிங், தலைமை கல்வி அதிகாரி (புதுச்சேரி) குலசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

