தி.மு.க., ஆட்சியில் சிறப்பாக செயல்படும் ஜெ., பல்கலை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
தி.மு.க., ஆட்சியில் சிறப்பாக செயல்படும் ஜெ., பல்கலை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
UPDATED : டிச 16, 2025 09:07 PM
ADDED : டிச 16, 2025 09:10 PM

சென்னை:
''தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலை, தி.மு.க., ஆட்சியில் தான் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
முத்தமிழ் பேரவை சார்பில், இயல், இசை, நடனக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. அதில், கலைஞர் பெயரிலான விருதை, நடிகர் நாசருக்கு முதல்வர் வழங்கினார்.
இயல், இசை, நாட்டியம் உட்பட ஐந்து பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் எட்டு கலைஞர்களுக்கு, விருதுகள் வழங்கப்பட்டன.
பின், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
'அடுத்த ஆண்டும் நான் முதல்வராக வந்து, இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்' என, நடிகர் நாசர் கூறினார். நான் அடக்கத்துடன் சொல்கிறேன். முதல்வராக வருகிறேனோ இல்லையோ, முதல் ஆளாக வருவேன்.
கருணாநிதியும் அப்படித் தான்; அவர் உருவாக்கிய வழக்கத்தை, நான் தொடர்ந்து கடைப் பிடித்து வருகிறேன். இந்த பேரவை, கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. எனவே, இந்த அமைப்பு நடத்தும் விழாவில் பங்கேற்பதில் எனக்கு பெருமை.
எந்த அமைப்பும் துவங்கும்போது, சிறப்பாகவும் எழுச்சியுடனும் இருக்கும். துவக்க விழாவிற்கு பின், முடிந்து போன எத்தனையோ அமைப்புகள் உண்டு. ஆனால், முத்தமிழ் பேரவை, 50 ஆண்டுகளை கடந்து, 51ம் ஆண்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறது.
கருணாநிதி பெயரில் விருது வழங்க வேண்டும் என, நான் கோரிக்கை வைத்தேன். அதன்படி, கடந்த ஆண்டு நடிகர் சத்தியராஜுக்கு, கலைஞர் விருது வழங்கப்பட்டது. நடப்பாண்டு நாசருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
அதேபோல் தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலை, நம் ஆட்சியில் தான் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
திரைக் கலைஞர்கள், இசை கலைஞர்கள் என, கலைஞர்களை போற்றும் அரசாக நம் அரசு உள்ளது. பண்பாடு மிக்க தலைமுறையாக, எதிர்கால இளைஞர்களை வளர்க்க, கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகள் தான் மிக மிக முக்கியம்.
இவ்வாறு அவர் பேசினார்.

