UPDATED : அக் 30, 2024 12:00 AM
ADDED : அக் 30, 2024 01:01 PM

சென்னை:
பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கை துவக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பொது மக்கள் இடையே சிக்கனத்தின் அவசியத்தையும், சேமிப்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ம் தேதி, உலக சிக்கன நாள் கொண்டாடப்படுகிறது.
மக்கள் தங்கள் வாழ்நாளில், சிக்கனமாக செலவு செய்து, வருவாயில் ஒரு பகுதியை சேமிப்பாக்கி, எதிர்காலத்தில் பெரும் பயனடைந்து, வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இதை உலக சிக்கன நாள் வலியுறுத்துகிறது.
ஏழை, நடுத்தர மக்களுக்கு அஞ்சலகங்கள் வாயிலாக செயல்படுத்தப்படும் சிறு சேமிப்பு திட்டங்கள், பாதுகாப்பு அரணாக அமைந்துள்ளன. இது, குடும்ப தேவைகளையும், எதிர்பாராத செலவுகளையும், எதிர்கொள்வதற்கு பயன்படுகிறது.
சிறுக கட்டி பெருக வாழ் என்ற பொன் மொழிக்கு ஏற்ப, பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கை துவக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.