குழந்தைகள் பத்திரம்! கோவையில் பரவுகிறது காய்ச்சல்; மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை
குழந்தைகள் பத்திரம்! கோவையில் பரவுகிறது காய்ச்சல்; மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை
UPDATED : செப் 12, 2024 12:00 AM
ADDED : செப் 12, 2024 09:16 AM

கோவை:
கோவை மாநகரில், பருவநிலை மாற்றத்தால் ப்ளூ காய்ச்சல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதால், பெற்றோர்கள் கவனமுடன் இருக்குமாறு, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவையில் கடந்த சில நாட்களாக, ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றத்தால் ப்ளூ காய்ச்சல் பரவி வருகிறது. இத்துடன் டெங்கு காய்ச்சலாலும் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். காய்ச்சல் அதிகரிப்பால் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனைகளில், பொதுமக்கள் அதிகளவில் சிகிச்சைக்கு வருகின்றனர்.
இதற்கிடையே பன்றி காய்ச்சல் பரவுவதாகவும், குழந்தைகளுக்கு அதிகளவில் காய்ச்சல் தொற்று ஏற்பட்டு வருவதாகவும், மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இதை உறுதிப்படுத்துவது போல், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் நல மருத்துவர் ராஜேந்திரன் கூறியதாவது:
கடந்த சில நாட்களாக ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. சிலருக்கு டெங்கு காய்ச்சலும் ஏற்பட்டு வருகிறது. ப்ளூ காய்ச்சலில் இருந்து, இன்புளுவென்சா ஏ மற்றும் பி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
சளி, இருமல், தும்மல் வாயிலாக இந்த வைரஸ் மற்றவர்களுக்கு, சுவாச குழலில் புகுந்து பரவுகிறது. குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், உடல் வலி, பெரியவர்களுக்கு அதிக இருமல், காய்ச்சல், தொண்டை வலி போன்றவை, இந்த சாய்ச்சலுக்கான அறிகுறியாகும்.
இன்புளூவென்சா வைரஸ், கிட்டத்தட்ட பன்றிக்காய்ச்சலில் இருந்து உருமாறியதாக கூறலாம். இதனால் பெரிய பாதிப்பு இல்லை.
90 சதவீதம் பேர், சாதாரண சிகிச்சையில் குணமடைந்து விடுகின்றனர். மூச்சுத் திணறல், சர்க்கரை நோய், உடல் உறுப்பு பாதிப்பு உள்ளவர்களில், 10 சதவீதம் பேருக்கு தான், தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது.
அதேபோல ப்ளூ காய்ச்சல், டெங்கு, 90 சதவீதம், முறையான சிகிச்சையினால், 5 நாட்களில் குணமடைந்து விடும். உலர் இருமல், சளி குணமாக 2 வாரங்கள் ஆகலாம். பன்றிக்காய்ச்சல் வந்தாலும், மக்கள் பயப்படத் தேவை இல்லை.
முறையான மருந்து, மாத்திரை, தடுப்பூசி எடுத்துக் கொண்டால் போதும். 6 மாத குழந்தைகளுக்கு, தனியார் மருத்துவமனைகளில் இன்புளூவென்சா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அதனால் பாதிப்பு குறைவுதான். குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருக்கும் போது சுயமருத்துவம் மேற்கொள்ளக்கூடாது. அந்தந்த வயதில் போட வேண்டிய தடுப்பூசிகளை கட்டாயம் போட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
இவரைப் போல் தனியார் குழந்தைகள் மருத்துவர்கள் பலரும், காய்ச்சல் வேகமாக பரவி வருவதையும், அதிகம் பேர் சிகிச்சைக்கு வருவதையும் உறுதிப்படுத்தினர். ஆனால், வழக்கம் போல் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா இதை மறுத்தார்.
கோவை மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு கிடையாது. மக்கள் அச்சம் அடைய தேவையில்லை. வாரம், 10 முதல், 15 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனாலும் முன்பை விட, பெருமளவில் டெங்கு பரவல் தடுக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் ப்ளூ காய்ச்சல் அதிகரித்து வருவது உண்மைதான். ஆனால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படவில்லை. ப்ளூ வைரஸ் காற்றின் வாயிலாக பரவுவதால், எளிதில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
காய்ச்சலில் இருந்து தப்ப என்ன செய்ய வேண்டும்?
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:
* ப்ளூ காய்ச்சலில் இருந்து தப்பிக்க, மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்.
* குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால், ஒரு குழந்தைக்கு காய்ச்சல் ஏற்படும் போது, மற்றொரு குழந்தையை தனிமைப்படுத்த வேண்டும்.
* பள்ளிகளில் குழந்தைகள் அருகருகே அமர்வதால், நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட குழந்தையிடம் இருந்து, மற்ற குழந்தைகளுக்கும் பரவுகிறது. எனவே, குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிய, அடிக்கடி கைகளை கழுவ அறிவுறுத்த வேண்டும்.
* குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் முடிந்தளவு பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கலாம். ஆரஞ்சு பழம், நெல்லிக்காய் போன்ற வைட்டமின் சி உணவுகளை எடுத்து கொண்டால், ப்ளூ வைரசில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.
* குளிர்ச்சியான காலநிலையின் போது, சூடான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போதைய காலநிலைக்கு, குளிர்ந்த பொருட்களை தவிர்ப்பது, வைரசிடம் இருந்து நம்மை காக்கும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.