UPDATED : ஜூலை 10, 2024 12:00 AM
ADDED : ஜூலை 10, 2024 09:46 AM
கொட்டாம்பட்டி:
கொட்டாம்பட்டி அருகே கே.புதுார் அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதி இல்லாததாலும், கட்டடத்தில் தண்ணீர் கசிவதாலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
இக்கிராமத்தில் 2014ல் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.6.50 லட்சம் மதிப்பில் இம்மையம் அமைக்கப்பட்டது. போதுமான வசதிகள் இல்லாததால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பெற்றோர் கூறியதாவது:
குடிநீர், சமையலுக்கு பயன்படுத்த போர்வெல் அமைத்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. மோட்டார் பழுதானதால் சரி செய்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. எனவே தெருக்குழாயில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சமைக்கின்றனர்.
மின்சப்ளை பழுதால் மின்விசிறியை பயன்படுத்த முடியாமல் மாணவர்கள் புழுக்கத்தில் அவதிப்படுகின்றனர். மையத்தின் மேல்பகுதியில் தண்ணீர் தேங்கி கட்டடம் முழுவதும் தண்ணீர் கசிகிறது. கழிப்பறை பயன்படுத்த முடியாத அளவு பழுதாகி விட்டது. அங்கன்வாடி மையத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றனர்.
வளர்ச்சி திட்ட அலுவலர் சண்முகபிரியா கூறுகையில், மின்சாரம், தண்ணீர் தேவை சரி செய்யப்படும் என்றார்.