குழந்தைகளுக்கான நுாலகம் ஐ.ஏ.எஸ்., வினோத் பிரியா ஆசை
குழந்தைகளுக்கான நுாலகம் ஐ.ஏ.எஸ்., வினோத் பிரியா ஆசை
UPDATED : டிச 30, 2024 12:00 AM
ADDED : டிச 30, 2024 09:03 AM
பெங்களூரு:
குழந்தைகளுக்கான நுாலகம் உருவாக வேண்டும் என்பது எனது ஆசை என்று, தமிழ் புத்தக திருவிழாவில் ஐ.ஏ.எஸ்., வினோத் பிரியா பேசினார்.
கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின், மூன்றாம் ஆண்டு தமிழ் புத்தக திருவிழாவில், நேற்று மாலை நடந்த விழாவில் தமிழ் ஐ.ஏ.எஸ்.,சும், பெங்களூரு மாநகராட்சி மண்டல கமிஷனருமான வினோத்பிரியா பேசியதாவது:
உன்னில் இருந்து தொடங்கு என்ற தலைப்பிலான சிந்தனை களத்தில் பேசுகிறேன். இந்த தலைப்பு, எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. புத்தகம் படிப்பது, எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த கால இளைஞர்களுக்கு, புத்தகம் படிக்க நேரம் இல்லை.
பெற்றோர், குழந்தைகளுக்கு மொபைல் போன்களை கொடுக்கின்றனர். மொபைல் போனுக்கு பதிலாக புத்தகம் கொடுங்கள்.
என் மகனுக்கும் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கிறேன். கடந்த முறையே நான் இங்கு வர வேண்டியது. பணி காரணமாக வர முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இங்கு வந்து, தமிழ் சொந்தங்களை பார்க்க வேண்டும் என்று ஆசை உள்ளது. அதற்காக நான் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
குழந்தைகளுக்காக மண்டல அளவில், நுாலகம் உருவாக வேண்டும் என்பது எனது ஆசை. இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம். வரலாறு தொடர்பான விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். வரலாற்றை பற்றி பிள்ளைகளுக்கு, பெற்றோர் சொல்லி தர வேண்டும்.
இவ்வாறு அவர்பேசினார்.
ஊடகவியலாளர் சிவநந்தினி கூறுகையில், தமிழ் வழியில் படித்தால் என்ன கிடைக்கும் என்று, எனது குடும்பத்தில் உள்ளவர்கள் என்னிடம் கேட்டனர். தமிழை படிப்பவர்கள் ஒரு போதும் பிச்சை எடுக்க மாட்டார்கள் என்று கம்பீரமாக சொல்லி கொள்கிறேன். உன்னில் இருந்து துவங்கு அருமையான தலைப்பு. எந்த ஒரு காரியத்தையும் நம்மிடம் இருந்து தான் துவங்க வேண்டும். அறிவியல் ஆசிரியரிடம் கேள்வி கேட்டு, தன்னில் இருந்து துவகியதால் தான், அப்துல்கலாம் ஜனாதிபதி ஆனார், என்றார்.