தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாறுகிறது குழந்தைகளின் உளவியல்: நிபுணர்கள் ரெட் அலெர்ட்!

மாறுகிறது குழந்தைகளின் உளவியல்: நிபுணர்கள் ரெட் அலெர்ட்!

மாறுகிறது குழந்தைகளின் உளவியல்: நிபுணர்கள் ரெட் அலெர்ட்!


UPDATED : நவ 08, 2026 02:28 PM

ADDED : நவ 08, 2026 02:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2026 02:28 PM ADDED : நவ 08, 2026 02:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
குழந்தைகள் என்றாலே விளையாட்டு, குறும்பு, சண்டை, சமாதானம் என இயல்பான குழந்தைப் பருவம்தான் நினைவுக்கு வரும். ஆனால், சமீபகாலமாக பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் வன்முறை செயல்கள், குழந்தைகளின் மனநலம் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளன.

ஹரியானா பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் எட்டு வயது மாணவன், ஆறு வயது மழலையர் வகுப்பு மாணவியைத் தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோல, பள்ளிகளில் சக மாணவர்களையும், ஆசிரியர்களையும் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இவை மாணவர்களின் பாதுகாப்பு மட்டுமின்றி, குழந்தைகளின் உளவியல் வளர்ச்சி குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளன.

குழந்தைகளுக்கு கோபம், பொறாமை, ஏமாற்றம், பயம் போன்ற உணர்வுகள் ஏற்படுவது இயல்பானது. அவற்றை கட்டுப்படுத்தவும் சரியான முறையில் வெளிப்படுத்தவும் அவர்கள் படிப்படியாக கற்றுக்கொள்ள வேண்டும். சில குழந்தைகள் அழுகை, அமைதி, ஒதுங்குதல் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நிலையில், சிலர் தாக்குவது, பொருட்களை உடைப்பது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதற்குப் பின்னால் குடும்பச் சூழல், பெற்றோரிடையே ஏற்படும் பிரச்னைகள், மன அழுத்தம், குழந்தை பருவத் துன்புறுத்தல்கள், தனிமை, நிராகரிப்பு உணர்வு உள்ளிட்ட பல காரணிகள் இருக்கலாம். மேலும், தொலைக்காட்சி, திரைப்படங்கள், இணையதள வீடியோக்கள், வீடியோ கேம்களில் இடம்பெறும் வன்முறைக் காட்சிகளும் சில குழந்தைகளின் சிந்தனை மற்றும் நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இது குறித்து, மனநல மைய உளவியல் நிபுணர் ஹெலீனா கூறியதாவது:

குழந்தைகள் சந்திக்கும் அனுபவங்கள் அவர்களுக்குள் 'இன்னர் வாய்ஸ்' எனப்படும் உள் குரலை உருவாக்குகின்றன. தொடர்ந்து புறக்கணிக்கப்படும் அல்லது துன்புறுத்தப்படும் குழந்தைகளிடம், 'என்னால் எதையும் தடுக்க முடியவில்லை; நான் பலவீனமானவன்' என்ற எண்ணம் உருவாகி பயம், குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மைக்கு வழிவகுக்கலாம்.

அதே நேரத்தில், 'என்னை எப்படி இப்படிச் செய்யலாம்?' என்ற கோபமும் ஆத்திரமும் மற்றவர்கள் மீதான தாக்குதலாக வெளிப்படலாம். தாக்குதலில் ஈடுபடும் குழந்தைகள் குடும்பச் சூழல், பெற்றோரின் உறவுமுறை, தனிமை, பாலியல் ரீதியான துன்புறுத்தல் உள்ளிட்ட உடல் அல்லது மனரீதியான பாதிப்புகளை சந்தித்திருக்கலாம்.

எனவே, அவர்களின் செயல்களை மட்டும் பார்க்காமல், அதற்கு பின்னால் உள்ள எண்ணங்களையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், சில ஆண்டுகளாக குழந்தைகளின் உளவியல் மாறி வருவதை கவனிக்க முடிகிறது. எதுவுமே முன்போல இல்லை.

குழந்தைகள் திடீரென அதிக கோபம் கொள்வது, சக மாணவர்களைத் தாக்குவது, பிறரை மிரட்டுவது, தனிமையை விரும்புவது, பள்ளிக்குச் செல்ல மறுப்பது, பிறருடைய வலியைப் பொருட்படுத்தாமல் இருப்பது போன்ற மாற்றங்களைப் பெற்றோர் கவனிக்க வேண்டும்.

தவறு செய்யும் குழந்தைகளை அடித்துத் தண்டிப்பதோ, மற்றவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்துவதோ தீர்வாகாது. மாறாக, அவர்களின் செயலுக்கான காரணத்தை பொறுமையாக கேட்டறிந்து, மனம்விட்டு பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளிலும் மாணவர்களின் நடத்தை மாற்றங்களை கண்காணித்து, ஆரம்ப நிலையிலேயே உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us