UPDATED : பிப் 13, 2025 12:00 AM
ADDED : பிப் 13, 2025 10:28 PM

புதுடில்லி:
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான விண்ணப்ப பதிவில் தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொள்வதாக விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவித்ததை அடுத்து, ஆன்லைன் விண்ணப்ப முறையில் யு.பி.எஸ்.சி., சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வு ஆணையம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான தேர்வை ஆண்டுதோறும் நடத்துகிறது. இந்த தேர்வு முதல்நிலை, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று கட்டங்களாக நடக்கும்.
இந்த ஆண்டு, 979 பணியிடங்களை நிரப்ப உள்ளனர். இதற்கான முதல்நிலை தேர்வு மே 25ல் நடக்க உள்ளது. விண்ணப்பிக்க கால அவகாசம் பிப்., 11 ஆக இருந்தது, 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை தேர்வில் மோசடிகளை தடுப்பதற்காக முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே, வயது மற்றும் இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பான சான்றிதழ்களை தாக்கல் செய்ய வேண்டும் என யு.பி.எஸ்.சி., தெரிவித்தது. அதற்கேற்ப ஆன்லைன் விண்ணப்பம் வடிவமைக்கப்பட்டது.
இந்நிலையில், இதில் விண்ணப்பித்த பலரும் பல்வேறு தொழில்நுட்ப இடர்களை சந்தித்தனர். இதையடுத்து, ஆன்லைன் விண்ணப்பத்தில் ஒரு முறை பதிவில் உள்ள பாலினம், சிறுபான்மையினர் அந்தஸ்து, 10ம் வகுப்பு தேர்வு பதிவு எண், எப்போதாவது பெயர் மாற்றம் செய்துள்ளீரா? ஆகியவற்றில் திருத்தம் செய்ய அனுமதித்துஉள்ளது.
மேலும் ஒரு முறை பதிவில் தந்த மொபைல் எண்ணை தவறவிட்டிருந்தால், மின்னஞ்சல் முகவரிக்கு ஓ.டி.பி., எனும் ஒருமுறை கடவுச்சொல் பெற்று மொபைல் எண்ணை மாற்றிக்கொள்ள வசதி செய்துள்ளனர்.
அதே போல் மின்னஞ்சலை மாற்ற விரும்பினால், மொபைல் எண்ணுக்கு ஓ.டி.பி., பெற்று மாற்றிக்கொள்ளலாம்.