500 அங்கன்வாடி மையங்கள் மூடல்; அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
500 அங்கன்வாடி மையங்கள் மூடல்; அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
UPDATED : ஜூலை 07, 2025 12:00 AM
ADDED : ஜூலை 07, 2025 10:44 AM

சென்னை:
அங்கன்வாடி மையங்களை மூடுவதை தவிர்க்குமாறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அதன் விபரம்:
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்:
தமிழகத்தில் 500க்கும் அதிகமான அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவது, கடும் கண்டனத்துக்கு உரியது.
ஏழை குழந்தைகளின் ஊட்டச்சத்தை கேள்விக்குறியாக்கும் இச்செயல், தி.மு.க., அரசின் நிர்வாகத் திறமையின்மையை காட்டுகிறது. அற்ப அரசியல் வீம்புக்காக, தி.மு.க., அரசு நிராகரிக்கும் தேசிய கல்வி கொள்கையில், அங்கன்வாடி மையங்களை துவக்கப்பள்ளி போல் மாற்றி அமைப்பதற்கான முன்னோடி முயற்சியும் வகுக்கப்பட்டுள்ளது.
ஆனால், வெற்று விளம்பரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் தி.மு.க., அரசு, அவற்றை மூடுவதற்கு ஆயத்தமாகி வருகிறது.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை, அரசு பணியாளர்களாக பணி அமர்த்துவோம் என்ற தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி, நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்றி, அங்கன்வாடி மையங்களை மூடுவதை கைவிட வேண்டும்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்:
மருந்துகள் இல்லாத மருத்துவமனைகள்; பேராசிரியர்கள் இல்லாத பல்கலைகள், கல்லுாரிகள்; ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகள்; பணியாளர்கள் இல்லாத அரசு அலுவலகங்கள் வரிசையில், ஊழியர்கள் இல்லாத அங்கன்வாடி மையங்கள் தற்போது தமிழகத்தில் செயல்படுகின்றன.
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கை, கடும் கண்டனத்துக்கு உரியது. முதல்வர் இதில் தனிகவனம் செலுத்தி, மூடப்பட்ட 500க்கும் அதிகமான அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனும், அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதற்கு, கண்டனம் தெரிவித்துள்ளார்.