கொடிசியா புத்தகத் திருவிழா நிறைவு: விசிட் செய்தவர்கள் மனநிறைவு
கொடிசியா புத்தகத் திருவிழா நிறைவு: விசிட் செய்தவர்கள் மனநிறைவு
UPDATED : ஜூலை 27, 2026 12:58 PM
ADDED : ஜூலை 27, 2026 01:00 PM
கோவை:
கொடிசியா சார்பில் 10 நாட்கள் நடந்த கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா, நேற்று நிறைவுற்றது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.
அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில், ஜூலை 17 முதல் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா நடந்தது. ஒவ்வொரு நாளும் மாலையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், வினாடி வினாக்கள், மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தன.
நேற்று நடந்த நிகழ்வில் எழுத்தாளர் ராமகிருஷ்ணன், ஒளிரும் வார்த்தைகள் என்ற தலைப்பில் பேசுகையில், மனிதன் நீண்ட ஆயுளுடன் வாழ நல் சிந்தனையும், நல்வாக்கும், நல் செயல்களுமே காரணமாகின்றன. நற்சிந்தனை வளர நல்ல புத்தகங்கள் உதவுகின்றன. நல்ல செயல்கள் வளரும் போது, கெட்ட செயல்கள் மறைகின்றன.
நம் முன்னோர் வறுமையில் வாழ்ந்தாலும், எதிர்காலம் பற்றிய பயமின்றி வாழ்ந்தனர். இன்று எல்லாம் இருந்தும், எதிர்காலம் பற்றிய பயம் உள்ளது. மகிழ்ச்சி மீண்டும் வரவேண்டும் என்றால், புத்தகங்கள் அவசியம். புத்தகங்கள் மட்டுமே மனித மனதை தூய்மையாக்க முடியும். நல்ல எண்ணங்களை உருவாக்க முடியும், என்றார்.
கண்காட்சியில் நேற்று மாலை பேராசிரியர் சாந்தாமணி தலைமையில் நடந்த மகிழ் மன்றத்தில் பேச்சாளர்கள் முகுந்தன், தொடர்விழி ஆகியோர் பேசினர்.
10 நாள் புத்தக திருவிழாவுக்கு 50 ஆயிரம் பேர் வருகை தந்து புத்தகங்களை வாங்கிச் சென்றதாக, கண்காட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
