தமிழ்புதல்வன் திட்டத்தில் கோவை மாவட்டம் முன்னோடி; சமூக நல அலுவலருக்கு முதல்வர் பாராட்டு
தமிழ்புதல்வன் திட்டத்தில் கோவை மாவட்டம் முன்னோடி; சமூக நல அலுவலருக்கு முதல்வர் பாராட்டு
UPDATED : நவ 12, 2024 12:00 AM
ADDED : நவ 12, 2024 09:42 AM

கோவை:
தமிழகத்திலேயே தமிழ்புதல்வன் திட்டத்தில் கோவை மாவட்டத்தில் 20,000 மாணவர்களை பயனடையச்செய்து சிறப்பான முறையில் பணியாற்றிய மாவட்ட சமூக நல அலுவலரையும் கலெக்டர் கிராந்திகுமாரையும் பாராட்டினார் தமிழக முதல்வர்.
கோவையில் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைக்கவும், மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கவும் கடந்த இரண்டு நாட்களாக கோவையில் இருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை அரசு விருந்தினர் மாளிகையில் அரசு அதிகாரிகளை சந்தித்தார்.
கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், மாவட்ட சமூகநல அலுவலர் அம்பிகா உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து பேசினர். அப்போது தமிழகத்திலேயே பிற மாவட்டங்களை காட்டிலும் முதன்மையாக கோவை மாவட்டத்தில் தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் 19,902 பேர் பயனடைந்திருக்கின்றனர்.
இதற்காக 400 சிறப்பு முகாம்களை கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் மாவட்ட சமூகநலத்துறை நடத்தியிருப்பது குறித்தும் முகாம் வாயிலாக மாணவர்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு குறித்தும் நேரடியாக அதிகாரிகள், முதல்வரிடம் கூறினர்.
மேலும் கோவையில் மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்தும் அதிகாரிகள் விரிவாக விளக்கம் அளித்தனர். இதைக்கேட்ட தமிழக முதல்வர் மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா உள்ளிட்ட அனைத்துப்பணியாளர்களையும் பாராட்டினார். அப்போது அரசு தலைமை செயலர் முருகானந்தம் உடனிருந்தார்.