sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கோவைக்கு வருமா சர்வதேச கல்வி நகரம்

/

கோவைக்கு வருமா சர்வதேச கல்வி நகரம்

கோவைக்கு வருமா சர்வதேச கல்வி நகரம்

கோவைக்கு வருமா சர்வதேச கல்வி நகரம்


UPDATED : ஏப் 09, 2024 12:00 AM

ADDED : ஏப் 09, 2024 12:20 PM

Google News

UPDATED : ஏப் 09, 2024 12:00 AM ADDED : ஏப் 09, 2024 12:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனித வளத்தைத் தேடி பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் கோவையில் கால் பதிப்பதற்கு அதிமுக்கியக் காரணம், இங்குள்ள தரமான கல்வி நிறுவனங்கள். அதனால் தான், சென்னையை அடுத்து உயர் கல்விக்கான முக்கிய கேந்திரமாக கோவை மாறியுள்ளது.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களோ, மேலாண்மை கல்வி நிறுவனங்களோ இங்கு இல்லை; அண்ணா பல்கலை கிளை, பாரதியார் பல்கலை, வேளாண் பல்கலை, அரசு தொழில்நுட்பக் கல்லுாரி, கோவை மருத்துவக் கல்லுாரி, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி என்று அரசு சார்ந்த சில கல்வி நிறுவனங்கள், கோவையில் இருந்தாலும் எதுவுமே சர்வதேச தரத்திலான கல்வி மையமாக அடையாளம் பெறவில்லை.
ஆனால் இங்குள்ள தனியார் கல்வி நிறுவனங்கள், தேசிய அளவில் சிறந்த தரமுடைய கல்வி நிறுவனங்களாக உருவெடுத்து, கோவைக்குப் பெருமை சேர்த்து வருகின்றன. கோவையிலுள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் என பலவிதமான கல்வி நிறுவனங்களில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.
குறிப்பாக, கேரள மாநிலத்திலுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோரின் முதல் தேர்வாக கோவை நகரம் உள்ளது. வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கோவைக்கு வந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதற்குக் காரணம், இங்குள்ள காலநிலை, கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அறிவுசார் மனித வளம்.
தேசிய அளவில் உயர் கல்விக்கான முக்கிய மையமாக அடையாளம் பெற்றுள்ள கோவையை சர்வதேச கல்விக் கேந்திரமாக மாற்ற வேண்டுமென்ற புதிய கருத்து எழுந்துள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளும், அடிப்படைக் கட்டமைப்புகளும் இங்கு அதிகமாகவே உள்ளன. மத்திய அரசும், மாநில அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், இந்த கனவுத் திட்டத்துக்கு உயிர் கொடுக்க முடியும்.
துபாய்... சிறந்த முன் மாதிரி

இந்த திட்டத்துக்கு முன்னோடியாக சுட்டிக்காட்டப்படுவது, துபாயில் உள்ள சர்வதேச கல்வி நகரம்.
கடந்த 2003ல், 30 கல்வி நிறுவனங்களுடன் துவக்கப்பட்ட துபாய் அறிவுப்பூங்கா (Dubai Knowledge Park), இப்போது 700 உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், திறன் மேம்பாட்டுக் கூடங்கள், தொழில் சார்ந்த பயிற்சி நிறுவனங்களுடள் உலகின் முக்கியமான மனித வள உற்பத்திக் கூடமாக மாறியுள்ளது.
துபாயின் டாப் 10 கல்வி நிறுவனங்களும், உலகின் மிக முக்கியமான 15 பல்கலைக்கழகங்களும் இங்கு அமைந்துள்ளன. இதன் பரிணாம வளர்ச்சியாக, கடந்த 2007 ல், துபாய் சர்வதேச கல்வி நகரம் (Dubai International Academic City) உதயமானது. பாலைவனத்தின் நடுவே, 12 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அதாவது 2960 ஏக்கர் பரப்பளவில், ஒரு பிரம்மாண்டமான கல்விச்சோலையாக இது மலர்ந்துள்ளது.
உலகில் மிகப்பிரபலமான 27 கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுடன் 28 ஆயிரம் மாணவர்கள் அங்கு படிக்கின்றனர்; மொத்தம் 500 வகையான படிப்புகள் மற்றும் பயிற்சிகள் அங்கு வழங்கப்படுகின்றன. கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு உட்பட உலகின் உயர் தர கல்வி நிறுவனங்கள், இந்தியாவின் பிட்ஸ்பிலானி, என்.ஐ.டி., ஐ.ஐ. டி., போன்றவையும் அங்கு தங்களின் கல்வி நிலையங்களை நிறுவியுள்ளன.
அங்கு படிக்கும் மாணவர்கள், எக்காரணத்துக்காகவும் வெளியே செல்ல வேண்டியதில்லை; சகல வசதிகளுடன் கூடிய மாணவர்கள் பொது விடுதி, பெற்றோருக்கான பொது விடுதி, பிட்னஸ் சென்டர், மருத்துவமனைகள், நீச்சல்குளம், விளையாட்டு மைதானங்கள், உணவகங்கள், வணிகப்பகுதி, தியேட்டர், பொழுதுபோக்கு மையங்கள் என அங்கு இல்லாதவை என்று எதுவுமே இல்லை.
அமெரிக்கா சென்று தங்கி, அங்குள்ள உயர் கல்வி நிறுவனத்தில் படிப்பதை விட, துபாய்க்கு சென்று, அதே கல்வி நிறுவனத்தின் சான்றுடன் பட்டம் பெறுவது எளிதானதாகவும், செலவு குறைவானதாகவும் இருப்பதால், ஆசியாவைச் சேர்ந்த பல்வேறு நாடுகளின் மாணவர்கள் அங்கு சென்று படிக்கின்றனர். இதேபோன்றதொரு கல்வி நகரத்தை (Kovai edu city) கோவைக்கு வெளியே உருவாக்குவதே இந்த கனவுத் திட்டம்.
மலைக்கும் நதிக்கும் அருகில்...

கோவைக்கு அருகில் இதற்கு இடம் கிடைப்பது சாத்தியமில்லை. அதனால் மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில், மேற்குத் தொடர்ச்சி மலை, பவானி நதியை ஒட்டிய பகுதியில், இதற்கு இடம் தேர்வு செய்யலாம். குறைந்தபட்சம் 3 ஆயிரம் ஏக்கர் நிலமெடுத்து, நகரைக் கட்டமைத்து, அதற்கு கோவையிலிருந்து தனி ரோடு, ரயில் தடம், மெட்ரோ ரயில் தடம் ஏற்படுத்த வேண்டும்.
துபாயில் இருப்பதைப் போலவே, மாணவர்கள் யாருமே வெளியில் வரத்தேவையில்லாத அளவுக்கு, இங்கேயே விடுதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உருவாக்க வேண்டும். இங்கு கல்வி நிலையத்தைத் துவக்குமாறு, உலகிலுள்ள, இந்தியாவில் டில்லி, மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் உள்ள பாரம்பரியமான, உயர் தர கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் அழைப்பு விடுக்கலாம்.
இங்கு வரும் கல்வி நிறுவனங்களுக்கான தரத்தை நிர்ணயம் செய்து, தேர்வு செய்வதற்கான ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும். அப்படி இங்கு வரும் கல்வி நிறுவனத்துக்கு, நாம் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க வேண்டும். சட்டப்படி நம் நாட்டில், அறக்கட்டளை, சொசைட்டி, பவுண்டேஷன், செக்சன் 8 கம்பெனிகளை உருவாக்கி, அவற்றின் மூலமாகவே கல்வி நிறுவனத்தைத் துவக்க முடியும்.
அது மட்டுமின்றி, துவக்கப்படும் பகுதி மற்றும் கல்வித் திட்டத்தின் அடிப்படையில், அரசின் ஏதாவது ஒரு பல்கலையுடன் அது இணைக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு பல்கலையின் பெயரிலேயே சான்றிதழ் வழங்கப்படும். ஆனால் இந்த கல்வி நகரத்தில் இந்த சட்ட நடைமுறைகள் மாற்றப்பட வேண்டும். அதன்படி, அந்த கல்வி நிறுவனமே, நேரடியாக சான்றிதழ் வழங்குவற்கேற்ப சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்.
அப்போது தான் அமெரிக்காவில் சென்று படிக்கும் படிப்பை, இந்தியாவில் குறைந்த செலவில் படித்து, அதே சான்றைப் பெற முடியுமென்ற நம்பிக்கையில், பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு படிக்க வருவார்கள். இந்திய மாணவர்களும் பயன் பெறுவார்கள். ஆனால் உயர் தரமுள்ள கல்வி நிறுவனங்கள் இங்கு வர வேண்டுமெனில், அதற்கு ஏராளமான சலுகைகளை வழங்குவது கட்டாயம்.
கோவை தொகுதிக்கு வெளியே, இந்த நகரத்தை எங்கு அமைந்தாலும், அது கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்துக்கான புதிய சர்வதேச அடையாளமாக மாறும். தமிழகத்துக்கே பெருமை சேர்க்கும் திட்டம் என்பதால், இதற்கு கோவை, நீலகிரி உள்ளிட்ட கொங்கு மண்டல எம்.பி.,க்கள் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். இப்போதே பணியைத் துவக்கி, வரும் 2030க்குள் இதைத் திறக்க வேண்டும். அப்படியொரு நகரம் அமைக்கப்பட்டால், அது தேசத்துக்கே முன் மாதிரியான திட்டமாக அமைவது உறுதி!
வரிச்சலுகை தர வேண்டும்

கோவை கல்வி நகரத்தில் கல்வி நிலையத்தைத் துவக்கும் எந்த உயர் கல்வி நிறுவனத்துக்கும் முதல் 10 ஆண்டுகளுக்கு அனைத்து வரிச்சலுகைகளையும் கொடுப்பது, அதில் முதன்மையானது. மாணவர்கள் பொது விடுதி முதல் பொழுதுபோக்கு மையம் வரை, எந்தவிதமான கட்டமைப்பை ஏற்படுத்துவோருக்கும் வரிச்சலுகைகளை வழங்குவது அவசியம்.அந்த கல்வி நிறுவனங்களின் சார்பில் தகுதி வாய்ந்த வெளிநாட்டு ஆசிரியர்கள் இங்கு வருவதற்கு தடையற்ற விசா வழங்கவும் அரசு உதவ வேண்டும். மிக முக்கியமாக, இந்த ஆசிரியர்களுக்கும், அந்த வளாகத்துக்குள் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும், உயர் ரக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதில் எந்தவிதமான சமாதானத்துக்கும் இடம் தரக்கூடாது.

என்னென்ன வசதி

கோவைக்கு வெளியே புதிய கல்வி நகர அமைப்பு திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலம், அரசிடம் தான் இருக்க வேண்டும்; ஒவ்வொரு கல்வி நிறுவனத்துக்கும் ஐந்து முதல் 10 ஏக்கர் வரையும், விடுதி உள்ளிட்ட மற்ற கட்டமைப்புகளுக்கு சிறு சிறு பகுதிகளாகவும் நிலங்களை 33 ஆண்டுகளுக்குக் குத்தகைக்குக் கொடுக்கலாம். அந்த வளாகத்துக்கு, தங்கு தடையற்ற மின்சாரம், தண்ணீர் வசதிகளை மாநில அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
சோலார், காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க சக்தியை, இந்த வளாகத்தில் பயன் படுத்த வேண்டும். இத்தகைய உத்தரவாதங்கள் இருந்தால் மட்டுமே, நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள உயர் தர கல்வி நிறுவனங்கள் இங்கு கல்வி நிலையத்தைத் துவக்குவதற்கு முன் வருவார்கள். இது பல ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டம் என்பதால், மத்திய அரசு இதற்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us